இந்தியா மீதான எதிர்பார்ப்பு!!

0 14

புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண் டும். இந்தியா அதற்கு வேண்டிய அழுத் தங்களை இலங்கை, அரசுக்குக் கொடுக்கவேண்டும். புதிய அரச மைப்பை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந் தால் வடக்கு – கிழக்கில் தீவிரமான போக்கைக் கொண்ட தலைமைத்துவங்கள் உருவாக வாய்ப் புண்டு என்று இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச தலைவராகப் பொறுப் பேற்கவும் முக்கிய துருப்புச்சீட்டாக அமைந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும், தமிழ் மக்களும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன – தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசு ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முக்கிய பங்காற்றி னார்கள்.

அவ்வாறு மலர்ந்த கூட்டு அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் இணைந்து புதியதொரு அரசமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது. ஆனால் அதன் பணிகள் தற்போது முடங்கிப்போயுள்ள நிலையில், அரசமைப்பின் உருவாக்கம் புத்துயிர் பெறவாய்ப்பில்லை என்று கருதப்படும் பின்னணியில், இந்தியத் தலைமை அமைச்சர் மோடியிடம் இவ்வாறானதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்.

‘புதியதொரு அரசமைப்பு உருவாகுவதற்கு இந்தியா வேண்டிய அழுத்தங்களை விரைந்து வழங்கவேண்டும்’ என்றும் கோரிக்கையை யும் முன்வைத்துள்ளார் இரா.சம்பந்தன்.

ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதும், நம்பி ஏமாறுவதும் புதிதான ஒன்றல்ல. அதற்கு, எக்கச்சக்க மான பதிவுகள் கண்முன் விரிந்து கிடக்கின்றன. எனினும், தம் மீதான எதிர்பார்ப்பை, நம்பிக்கையை தமிழர் தரப்பு இன்னமும் கைவிடவில்லை என்பதை இந்தியத் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க் காலத்தில் முதுகில் குத்தி தமிழர் தாயகத் துக்கு பச்சைத் துரோகம் இழைத்த இந்தியா, தன்மீது பிடித்துள்ள குருதிக் கறையைப் போக்கிக் கொள்வ தற்கு இந்த அரசமைப்பு விவகாரத்தை மிகச் சிறந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிய வல்லாதிக்கச் சக்தியாக இலங்கையில் வேரூன்றுவதும் வலுவான ஆதிக்கம் செலுத்து வதும் நானா , நீயா என்கிற போட்டி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அண்மைக்காலமாக வலுவாகவே இடம்பெற்று வருகிறது. இதனால் கூட்டமைப்புக் கேட்கும் புதிய அரசமைப்பை சாத்தியப்படுத்தினால் அது இந்தியாவுக்கு இமால யச் சிக்கல்களை சிங்களப் பேரினவாத சக்திகள் மத்தியில் ஏற்படுத்தும்.

அவ்வாறான சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து எழுகின்ற எதிர்ப்பலை இந்தியாவைப் புறமொதுக்கி சீனாவை இலங்கை யில் வேரூன்ற வைக்க வழிவகுத்துவிடும். இந்தியாவின் தயக்கம் இதுவே. எனினும், இந்த வல்லாதிக்கப் போட்டிக்கு தமிழர்களை பலிகடா வாக்கும் போக்கை இந்தியா கைவிட வேண்டும். தமிழ் இனத்தின் விடுதலைக்கும் மீட்சிக்கும் தனது காத்திரமான பங்களிப்பை அது வழங்க வேண்டும். இந்தியாவின் மட்டில் தமிழர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் உள்ளது. மாறாக நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவது அல்ல.

You might also like