இந்துவின் மைந்தர்களின்- வழிகாட்டியான தந்தை!!

எம்­மண்­ணில் தன் ஆளு­மை­யால் நிலைத்து நிற்­கும் புக­ழைப் பெற்ற அம­ரர் இ.சபா­லிங்­கத்­தின் ஜனன நூற்­றாண்டை உல­கம் முழு­வ­தும் வாழும் இந்­து­வின் மைந்­தர்­கள் பெரு­மை­யோடு கொண்­டாடி வரு­கி­றார்­கள்.

பிறப்பு
1919ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இளை­ய­தம்பி லட்­சு­மிப்­பிள்ளை தம்­ப­தி­யி­ன­ருக்கு புதல்­வ­னா­கப் பிறந்­த­வர் அம­ரர் இ.சபா­லிங்­கம். நல்­லை­ந­கர் நாவ­லர் பெரு­மா­னின் வண்­ணார்­பண்ணை சைவப்­பி­ர­காச வித்­தி­யா­சா­லை­யில் தனது ஆரம்­பக் கல்­வியை கற்ற இவர் தந்­தை­யா­ரோடு மலே­சியா நாடு சென்று கோலா­லம்­பூர் விக்­ரோ­ரியாக் கல்­லூ­ரி­யில் தனது இடை­நி­லைக்­கல்­வி­யைத் தொடர்ந்­தார்.

கல்வி
1932இல் மீண்­டும் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்து யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­றார். 1931ஆம் ஆண்­டு­வரை இந்­துக் கல்­லூ­ரி­யில் விளை­யாட்­டுத்­து­றை­யில் சிறந்த விளை­யாட்டு வீர­னாக பல­ருக்­கும் அறி­மு­க­மா­னார். இவ­ரது உடன்­பி­றந்த சகோ­த­ரன் இ.கன­க­லிங்­க­மும் (முன்­னாள் அதி­பர் பலாலி ஆசி­ரி­யர் பயிற்­சிக் கலா­சாலை) கால்­பந்­தாட்­டத் துறை­யி­லும் ஏனைய விளை­யாட்­டுத் துறை­யி­லும் கல்­லூ­ரிக்குப் பெருமை தேடிக் கொ­டுத்­த­னர். இந்­துக் கல்­லூ­ரி­யில் இருந்து யூனி­யர் கேம்­பி­ரிஜ் சான்­றி­தழ், லண்­டன் மற்­றிக்­கு­லே­சன் சான்­றி­தழ், இன்­ரர்­மீ­டி­யற் (விஞ்­ஞா­னம்) பரீட்­சை­கள் யாவற்­றி­லும் மிகச் சிறந்த பெறு­பேறு பெற்­றார். 1937ஆம் ஆண்டு இலங்­கைப் பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரிக்கு தெரி­வாகி விஞ்­ஞா­ன­மானி பட்­டம் பெற்­றார்.

ஆசி­ரி­யப் பணி
கணி­தத்­து­றை­யி­லும், பௌதீ­கத்­து­றை­யி­லும் சிறந்த விற்­பன்­ன­ராக விளங்­கிய இவரை பல தனி­மு­கா­மைத்­துவ கல்­லூ­ரி­கள் ஆசி­ரி­யப்­ப­ணிக்­காக அழைத்­தன. யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அதி­கா­ர­சபை 1942ஆம் ஆண்டு உரும்­பி­ராய் இந்­துக் கல்­லூ­ரி­யில் இவரை ஆசி­ரி­ய­ராக நிய­மித்­தது. உரும்­பி­ராய் இந்­துக் கல்­லூ­ரி­யில் இருந்து அரச ஆசி­ரி­யர் பயிற்­சிக் கல்­லூ­ரிக்­குச் சென்று பட்­டப்­பின் ஆசி­ரி­யர் பயிற்­சிப் பட்­டம் பெற்­றார். பயிற்சி நிறை­வ­டைந்­த­தும் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் ஆசி­ரி­ய­ராகத் தனது சேவையைத் தொடர்ந்­தார். கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் உயர்­தர விஞ்­ஞா­னத்­து­றைக்கு பொறுப்­பா­சி­ரி­ய­ராக அரிய சேவையை ஆற்­றி­னார். 1960இல் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி உப அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டார். பின் 1964 முதல் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அதி­ப­ராக தன்­பணி தொடர்ந்­தார். யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யில் இவர் பொறுப்­புக்­களை ஏற்­ற­போது பெரும் சவால்­களை சந்­தித்­தார். ஆனால் எதற்­கும் அஞ்­சாத ஆளுமை மிக்க அதி­பர் அவர்­கள் தன் ஆற்­றலை வெளிப்­ப­டுத்தி அனைத்து சவால்­க­ளை­யும் முறி­ய­டித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யில் கல்­வித்­து­றை­யும் விளை­யாட்­டுத்­து­றை ­யும் இவ­ரது சேவைக்­கா­லத்­தில் மிக உன்­னத நிலையை அடைந்­தது. அந்­தக் கல்­லூ­ரி­யில் அதி­பர் தரத்­தில் உயர்­வு­ பெற்று பெருமை பெற்­றார். 1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் தன் தாய் வீடு போல் என்­றும் கரு­திய யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் அதி­ப­ராக பத­வி­யேற்­றார். 1975 ஓகஸ்ட் வரை இந்­துக் கல்­லூ­ரி­யின் அதி­பர் அரி­யா­ச­னத்தை மிக உன்­ன­த­மாக அலங்­க­ரித்­தார். சகல துறை­க­ளி­லும் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி தேசி­ய­மட்­டத்­தில் துலங்­கு­வ­தற்கு வித்­திட்­டார். கூடு­த­லான மாண­வர்­கள் இவ­ரது காலத்­தில் இந்­துக் கல்­லூ­ரி­யில் இருந்து பல்­க­லைக்­க­ழ­கம் செல்­லும் நிலையை உரு­வாக்­கி­னார். இந்­துக் கல்­லூ­ரி­யில் அனு­மதி பெற­வேண்­டும் என்று இலங்­கை­யின் பல பாகங்­க­ளி­லி­ருந்து மாண­வர்­கள் இந்­துக் கல்­லூ­ரியை நாடி வந்­த­னர். விடு­திச்­சாலை நிரம்பி வழிந்­தது.

ஆளுமை
யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் பத­வி­யேற்ற அன்றே தன் ஆளு­மையை வெளிப்­ப­டுத்த தொடங்­கி­னார். தண்­ணீரைக் குடித்­து­விட்டு குழாய் சரி­யாக மூடாத மாண­வ­னுக்கு முது­கில் போட்­டார். வந்த அன்றே மாண­வர்­கள் திடுக்­குற்­ற­னர். ஆசி­ரி­யர் இல்­லாத வகுப்­பில் தானே சென்று வகுப்பு எடுக்­கத் தொடங்­கி­னார். கல்­லூரி அதிர்ந்­தது. பிரார்த்­தனை மண்­ட­பத்­தில் இரு­ம­ருங்­கி­லும் ஆசி­ரி­யர்­கள் காத்­து­நின்­ற­னர். வரிசை குழப்­பிய மாண­வ­னுக்கு இரண்­டாம்­நாள் வீழ்ந்த அடி அனை­வ­ரை­யும் அதி­ர­வைத்­தது.

பிரார்த்­தனை மண்­ட­பத்­தில் தின­மும் ஐந்து நிமி­டம் அவர் ஆற்­றும் உரை மந்­தி­ர­மாக விளங்­கி­யது. கடி­கா­ரம் ஓடும்­முன் கட­மைக்கு வந்­து­வி­டு­வார். தாம­த­மாய் வந்­த­வர்­கள் இவ­ரது பார்­வை­யிலே அகப்­பட்­டுத் திருந்­தி­னர். சமய விழாக்­கள் யாவும் ஒழுங்­காக நடை­பெற்­றது. வெள்­ளிக்­கி­ழ­மை­க­ளில் அதி­காலை 4மணிக்கு நல்­லூரை நோக்கி மாண­வர்­கள் நடந்து செல்­ல­வேண்­டும். கந்­தர்­ம­டத்­தில் இருந்து அதி­ப­ரும் இணைந்து கொள்­ளு­வார். ஓர் கட்­ட­ளைத் தள­ப­திக்கு கீழ் படை­வீ­ரர்­கள் பிர­தா­னி­கள் செல்­வ­து­போல் அதி­ப­ருக்கு பின்­னால் இந்­துக் கல்­லூரி மாண­வர்­கள் வெள்­ளிக்­கி­ழ­மைப் பிரார்த்­த­னை­யில் கலந்து கொண்ட காட்சி மெய்­சி­லிர்க்க வைத்­தது. அகில இலங்கை சேக்­கி­ழார் கழ­கத்­தில் தலை­வ­ராக விளங்­கிய அதி­பர் தனது சேவைக்­கா­லத்­தில் நடத்­திய சேக்­கி­ழார் விழாக்­கள் என்­றும் மறக்­க­மு­டி­யாது.

அஞ்­சா­நெஞ்­சன்
நேரம் தவ­றாத, நேர்மை தவ­றாத, நேர்த்­தி­யான தலை­மைத்­து­வத்தை நிலை­நாட்­டிய அதி­பர் சபா­லிங்­கத்­தி­டம் யாரு­டைய பரிந்­து­ரை­யும் எடு­ப­டு­வ­தில்லை. அர­சி­யல்­வா­தி­கள் கல்­லூரி வள­வுக்­குள் வரு­வ­தில்லை. அதி­கா­ரி­கள் கல்­லூரி வள­வுக்கு வரு­வ­தற்கு அஞ்­சு­வர். மந்­தி­ரி­யின் பரிந்­து­ரை­யோடு பாட­சாலை அனு­மதி கோரி வந்­த­வ­ரின் கடி­தத்தை, கொண்டு வந்­த­வர் முன்­னி­லை­யி­ லேயே கிழித்து குப்­பைத்­தொட்­டி­யில் போட்­டார். சிமோல் அரு­ளம்­ப­லம் இந்­து­வின் பழைய மாண­வன். நல்­லூர்த் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். கல்­லூரி பழைய மாண­வர் சங்­கத்­தில் முக்­கி­ய­ மா­ன­வர். அவ­ரது பரிந்­து­ரையை நிரா­க­ரித்­தார். அவ­ருக்கே தொலை­பே­சி­யில் நண்­பரே என்­னைக் குழப்­பாதே என்­றார். இந்­தத் துணிவு இனி­மேல் எவ­ரி­டமாவது காணமுடியுமா?

1972ஆம் ஆண்டு கல்வி அமைச்­சர் பதி­யு­தீன் முக­மத் இந்­துக் கல்­லூ­ரிக்கு வரு­வ­தாக அறி­வித்­தார். தரப்­ப­டுத்­த­லால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மாண­வர்­கள் கறுப்­புக் கொடி­களைக் காட்­டி­னர். கல்­லூ­ரிச் சுவர் எல்­லாம் எழு­தித்­தள்­ளி­னர். திணைக்­க­ளம் சார்ந்­த­வர்­கள் மீள­வும் வர்­ணம் தீட்­டி­னார்­கள். மீண்­டும் எழு­தப்­பட்­டது. அதி­பர் சபா­லிங்­கம் அழைப்­புக் குழு­வி­ன­ருக்கு எடுத்­து­ரைத்­தார். மாண­வர் குமு­றலை அமைச்­ச­ரும் அறி­யட்­டும், இனி எழு­தி­யதை அழிப்­ப­தால் பய­னில்லை. அமைச்­சர் வந்­தார். அதி­பர் தலை­மை­யு­ரை­யி­லேயே மாண­வ­ரின் கொந்­த­ளிப்பு பற்றி எடுத்­து­ரைத்­தார். என்ன நடக்­குமோ என சிலர் அஞ்­சி­னர். எது­வும் நடக்­கட்­டும் என்று அதி­பர் துணிந்­தார்.

நேரம் தவ­றாமை
பாட­சாலை விழாக்­க­ளுக்கு மிகத் தகு­தி­யா­ன­வர்­களை அழைப்­பது வழக்­கம். ஒரு­முறை கல்­லூ­ரி­யின் கண்­காட்சி விழா­வின் போது தலைமை விருந்­தி­ னர் வட­மா­நி­லக் கல்வி அதி­பதி தி.மாணிக்­க­வா­ச­கர் உரிய நேரம் வந்து சேர­வில்லை, அதி­பர் நாடாவை வெட்டி விழாவை ஆரம்­பித்து வைத்­தார். தாம­த­மாக வந்­த­வர் மன்­னிப்­புக் கேட்­டார். நான் மன்­னிக்­க­லாம், மணிக்­கூடு மன்­னிக்­காது நண்­பரே என்று பதில் சொன்­ன­தாக இன்­றும் பலர் சொல்லி ஆச்­ச­ரி­யப்­ப­டு­வார்­கள்.

அதி­பர் 1975ஆம் ஆண்டு தனது 56 வய­தில் இளைப்­பா­றி­னார். நைஜீ­ரியா நாட்­டுக்­குச் செல்­வ­தற்­காக அவர் திடீர் என இளைப்­பா­றிய பொழுது கல்­லூரி சமூ­கம் மிக­வும் கவ­லை­யுற்­றது. கந்­தர்­ம­டத்­தில் உள்ள கற்­ப­கம் இல்­லம் வரை ஆசி­ரி­யர்­க­ளும் மாண­வர்­க­ளும் ஊர்­வ­ல­மாகச் சென்று விடை­கொ­டுத்­த­ னர். கண்­ணீர் மல்க அவ­ரது காலில் மாண­வர்­கள் வீழ்ந்து வணங்­கிய காட்சி இன்­றும் பசு­மை­யாக உள்­ளது.

தொழிற்­சங்­க­வாதி
அன்­னார் சமூ­கத் தொடர்­போடு பல பொதுப்­ப­ணி­களை ஆற்­றி­ய­வர். சிறந்த தொழிற்­சங்­க­வாதி. யாழ்ப்­பா­ணப் பட்­டின ஆசி­ரி­யர் சங்­கத் தலை­வ­ராக, வட­மா­காண ஆசி­ரிய ஒன்­றி­யத் தலை­வ­ராக, தேசிய ஆசி­ரிய ஒன்­றி­யத் தலை­வ­ராக பங்­காற்­றி­ய­வர். 1959இல் இலங்­கைப் பிர­தி­நி­தி­யாக பரிஸ் நாட்­டில் ஆசி­ரி­யர் மகா­நாட்­டில் பங்­கு­பற்றி உரை­யாற்­றி­னார். 1959 ஓகஸ்ட் மாதம் அமெ­ரிக்கா வொசிங்­டன் மாநி­லத்­தில் நடை­பெற்ற உலக ஆசி­ரி­யர் மகா­நாட்­டில் இவர் பங்­கு­பற்றி உரை­யாற்றி உள்­ளார். 1959ஆம் ஆண்­டின் இறு­திப்­ப­கு­தி­யில் பிரிட்­டிஸ் கவுன்­சி­லில் அதி­தி­யாகப் பங்­கு­பற்­றும் பேறு இவ­ருக்குக் கிடைத்­தது.

வட­மா­காண விஞ்­ஞா­னக்­க­ழ­கம், வட­மா­காண சார­ணர் சங்­கம், யாழ்ப்­பாண விளை­யாட்­டுச்­சங்­கம், போன்­ற­வற்­றில் இவர் ஆற்­றிய சேவை­கள் உன்­ன­த­மா­னது. சைவ­ப­ரி­பா­லன சபை­யில் தலை­வ­ரா­க­வும், அகில இலங்கை சேக்­கி­ழார் மன்­றத் தலை­வ­ரா­க­வும் அரிய சேவை ஆற்­றி­னார். நல்லை திரு­ஞா­ன­சம்­பந்­தர் ஆதீ­னத்­தின் ஆரம்­ப­கால ஆலோ­ச­க­ராக விளங்­கி­னார்.

இவ­ரது மனைவி திரு­மதி மலர்­சோதி சபா­லிங்­கம் இவ­ரது வெற்­றிக்கு பெரும் துணை­யாக விளங்­கி­னார். அன்­னா­ரின் பிள்­ளை­கள், மரு­மக்­கள் கல்­வி­யில் மிக உன்­னத நிலை­யில் இன்று இருப்­பது பெரு­மைக்­கு­ரிய விட­ய­மா­ கும். அன்­னா­ரது மைந்­தன் மருத்­து­வக் கலா­நிதி ச.ஜோதி­லிங்­கம் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் தனது தந்­தை­யின் நினை­வாக ஒரு மண்­ட­பத்தை உரு­வாக்­கி­யுள்­ளமை நன்­றிக்­கு­ரிய விட­ய­மா­கும்.

பிரிவு
1988ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூன்­றாம்­நாள் லண்­ட­னில் அதி­பர் அம­ர­ரா­னார். அன்­னா­ரின் மறை­வுச் செய்­தி­கேட்டு யாழ்ப்­பா­ணச் கல்­விச்­ச­மூ­கம் மிக­வும் துய­ருற்­றது. நாட்­டின் அசா­தா­ரண சூழ்­நி­லை­யால் அவ­ரது இறு­திக்­கா­லம் லண்­ட­னில் நிறை­வா­கி­விட்­டது. ஒரு கல்­லூ­ரி­யில் அதி­ப­ராக எவ்­வாறு பணி­யாற்ற வேண்­டும் என்­ப­தை அதி­பர் சபா­லிங்­கம் எம் சமூ­கத்­துக்கு விளங்­க­வைத்­து­விட்டு சென்­று­விட்­டார். தூய வெள்­ளை­வேட்டி, நஷ­னல், மடிப்­புக் குலை­யாத சால்வை, எதற்­கும் அஞ்­சாத நடை, துணிவு இம்­ம­னி­த­னின் தனித்­து­வத்தை நீள­நி­னைந்து சிந்­திக்க வைக்­கி­றது.

அன்­னா­ரின் ஜனன நூற்­றாண்டு இந்­து­வின் மைந்­தர்­க­ளால் பல நாடு­க­ளி­லும் கொண்­டா­டப்­ப­ட­வி­ருப்­பது மகிழ்­வைத் தரு­கி­றது. யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் நாளை அன்­னா­ரின் நூற்­றாண்டு விழா விம­ரி­சை­யாக கொண்­டா­டப்­ப­டு­வது நன்­றிக்­கு­ரிய விட­ய­மா­கும். அன்­னா­ரின் ஆத்மா என்­றும் எம் கல்­விச் சமூ­கத்தை ஆசீர்­வ­திக்க வேண்டி பிரார்த்­தித்து அமை­கி­றேன்.

கலாநிதி. ஆறு.திருமுருகன்.
பழைய மாண­வன்,
யாழ். இந்­துக் கல்­லூரி.

You might also like