இப்படியே போனால் எங்குபோய் முடியும்?
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனது அதிபுத்திசாலித்தனம் என்று நினைத்துத் தொடக்கி வைத்த அரசியல் மாற்றம் என்கிற குழப்பம் ஒரு மாதம் கடந்தும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. நிலமை இப்படியே தொடர்ந்தால் அதன் விளைவு எங்கு போய் முடியும் என்கிற பயங்கரக் கேள்வி பயமுறுத்தி நிற்கின்றது.
அரச தலைவரால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது. அதே நேரத்தில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்களின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியாலும் வெளிப்படுத்த முடியவில்லை. மகிந்த அரசுக்கு எதிராக மட்டுமே அதனால் 122 ஆசனங்கள் என்கிற பெரும்பான்மையைக் காட்டக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலமை தோன்றியுள்ளது. அத்தகையதொரு நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட அரச இயந்திரத்தை இயக்குவதற்கான அத்தியாவசியச் செயற்பாடுகள் அனைத்தும் முடங்கிவிடும் ஆபத்து இருக்கின்றது.
எதிர்காலம் குறித்த இந்தச் சூனிய நிலை தொடர்பில் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. அந்தக் கட்சியின் அரசியல் உயர் குழு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்நெத்தி நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இது பற்றிய கேள்விகளை எழுப்பினார்.
‘‘நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தும் கட்சி ஒன்று இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. எதிர்வரும் மார்கழி மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் அரசு செலவிடுவதற்கு எந்தப் பணமும் இருக்கப் போவதில்லை. அடுத்த ஆண்டு தை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக நாடு செலுத்தவேண்டியிருக்கும் கடன் தொகை மட்டுமே 1 மில்லியன் அமெரிக்க டொலர் உண்டு. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை அடுத்த ஆண்டு தொடங்கியதும் அரசு எப்படிச் செலுத்தப் போகின்றது என்பதை அரச தலைவர் நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்.’’
இவ்வாறு சுனில் கந்துன் நெத்தி தெரிவித்திருக்கிறார். ‘‘டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு படு மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடன் சுமை மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை என்பன இதனால் இன்னும் அதிகரித்துள்ளன. ரூபாவின் மதிப்பிறக்கம் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. மகிந்த ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதொன்றல்ல என்பது இதன் மூலம் தெரிந்துவிடும்’’ என்று மேலும் தெரிவித்திருக்கிறார் கந்துன்நெத்தி.
அவரது அபாய அறிவிப்பு நியாயமானதே! பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து நாட்டை வழமை நிலைக்குத் திருப்பவில்லையென்றால் பல லட்சக்கணக்கான அரச ஊழியர்களின் நிலை மற்றும் ஓய்வூதியர்களின் நிலை என்ன என்பது பயமுறுத்தும் கேள்வி. அரச சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் எத்தனையோ குடும்பங்கள் இதனால் நிர்க்கதி நிலையை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அத்தோடு நாடும் பக்கவாதத்தால் முடங்கிப்போக வேண்டியிருக்கும்.
இத்தகைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் தான் உருவாக்கிய அரசியல் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான நகர்வுகளை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக மேற்கொள்ளவேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை என்பதுதான் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் துன்பியல்.