இயற்கை விவசாயத்துக்கு- படைப்புழுக்களால் பாதகம் இல்லை!!

விதைத்துச் சில வாரங்களே ஆன தமது சோளப் பயிர் களை மாலைவரைப் பார்த்து விட்டு, இந்த முறையாவது நல்ல வருமானத்தை ஈட்டவேண்டுமென்று நினைத்துக்கொண்டு படுக்கைக்குச் செல்லும் விவசாயிகள், மறுநாள் காலை தோட்டத்துக்குச் சென்று பார்க்கும்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்தின் பெரும்பாலான வேளாண் பகுதிகளிலும், இலங்கையின் பல பகுதி களிலும் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சிக்குக் காரணம் மனிதர்களின் பழிவாங்கலோ, விலங்குகளின் அட்டகாசமோ அல்ல. அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு ஆபிரிக்காவுக்குச் சென்று, அங்கு விவசாயத்துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் பறந்து வந்து பயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் படைப்புழுக்களே காரணம். ஆம், விவசாயிகளின் பல்லாண்டுகால அனுபவத்திற்கும், அவர்கள் அடிக்கும் விதவிதமான பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சளைக்காத படைப்புழுக்கள் தற்போது தமிழகத்திலும், இலங்கையிலும் விவசாயத் துறையில் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளன.

படைப்புழுக்கள் என்றால்…?
தற்போது பூதகரமாகியுள்ள இந்த விடயத்தை முற்று முழுதாக அறிந்து கொள்ளவேண்டுமாயின் படைப்புழுக்க ளைப் பற்றியும் அவை எப்படிச் செயல்படுகின்றன? என்பதைப் பற்றியும் தெளிவுபெறுவது முக்கியமானதாகும். இதன் பின்னர் அவை விளைவிக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன என்று கண்டறிய முடியும். இத்தனை நாள் கேள்விப்படாத படைப்புழு எங்கிருந்து வந்தது? புழுக்கள் அல்லது பூச்சிகளை எடுத்துக்கொண்டால் நன்மை செய்யக்கூடியன, தீமை செய்யக்கூடியன என இரண்டு வகைகள் உள்ளன. அதில், தீமை செய்யக்கூடிய வகையைச் சேர்ந்த புழுக்களி லேயே மோசமானதுதான் ஸ்போடாப்டிரா வ்ப்ரூஜ்பெர்டாடா என்னும் உயிரியல் பெயர் கொண்ட இந்தப் படைப்புழு.

அமெரிக்காவிலிருந்து படையெடுத்தவை…
வெறும் 30 நாள்கள் மட்டுமே வாழும் படைப்புழுக்கள் மற்றைய புழுக்களைப் போலன்றி, பல்லாயிரம் கிலோமீற்றர்கள் பறக்கக்கூடியன. முதன் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்தப் படைப்புழுக்கள் அங்கிருந்து ஆரிக்க நாடுகளுக்குச் சென்று சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைக் கூண்டோடு அழித்து விவசாயத் துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றிப் பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மக்களை ஆளாக்கியது. இந்தியாவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற விழிப்போடு கடந்த சில ஆண்டுகளாக வேளாண் விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தி யாவில் முதன் முதலாகக் கர்நாடக மாநிலத்தில் படைப் புழுக்களின் அட்டகாசம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக விவசாயம் மேற்கொள்ளப்படும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட வேளாண் அதி காரிகள், விஞ்ஞானிகள் கடும் கண்காணிப் பில் ஈடுபட்டு வந்த நிலையிலும், முதன் முதலாக கோயம் புத்தூர், ஈரோடு பகுதிகளில் இரவோடு இரவாக படைப் புழுக்கள் சோளப் பயிர்களை நாசம் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. மற்றைய புழு வகைகளோடு முற்றிலும் வேறுபட்ட பயிர்த் தாக்குதலைத் தொடுக்கும் படைப்புழுக் களே அது என்பது ஆய்வுக்குப் பின் தெரியவந்தது.

‘16 கால்கள், ஒரே சமயத்தில் 300 முட்டைகள்’
தனது வாழ்நாளில் புழுவிலிருந்து அந்துப்பூச்சியாக உருமாறியவுடன் உடனடியாக இனச்சேர்கையில் ஈடுபடும் இவை ஒரேசமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையைக் கொண்டது. சில நாள்களில் முட்டையிலிருந்து வெளிவரும் படைப்புழுக்களுக்கு 16 கால்கள் இருப்பதுடன் அடுத்த இரண்டு வாரங்களில் 3 மில்லி மீற்றர் என்ற அளவிலிருந்து 2 ½ சென்ரி மீற்றர் நீளத்துக்கு வளர்கிறது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னாலான அளவுக்கு அதிகப்படிப்பான சோளம் உள்ளிட்ட தனக்கு விருப்பமான பயிர்களை உட்கொண்டு பிறகு மண்ணுக்குள் செல்கிறது. மண்ணுக்குள் அடுத்த 10 நாள்களுக்கு இருக்கும் அவற்றின் கால்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைகின்றன. புதிதாக இரண்டு இறக்கைகளும், கண்களும் பெற்றுக்கொண்டு ஆண், பெண் அந்துப்பூச்சிகளாக உருவெடுக்கின்றன.

முட்டைகளைப் பாதுகாக்கின்றன
மண்ணுக்குள்ளிருந்து வெளியே பறந்து வரும் பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கையை மேற்கொள்ளும் எண்ணத்துடன் சுரக்கும் ஒருவித வாசனைத் திரவத்தால் கவர்ந்தெழுக்கப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் அதைத் தேடிச் சென்று இனச்சேர்க்கையில் ஈடுபட்டு முன்னர் கூறியதை போன்று ஒரே சமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இலைகளில் இட்டு அதை ஒருவித திரவத் தைக் கொண்டு மூடிப் பாதுகாக்கின்றன.
பின்பு அங்கிருந்து அடுத்த இடத்தை நோக்கிப் பறந்து சென்று தனது பணியை தொடருகின்றன. ஒருவேளை பெண் அந்துப்பூச்சியால் இனச்சேர்க்கையில் ஈடுபட முடியவில்லை என்றால் அடுத்த சில நாள்களில் அது உயிரிழந்துவிடுகின்றது.

‘இயற்கை விவசாயமே தீர்வு’
அதிக வருமானத்தைப் பெற்றுக் குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மண்ணின் வளத்தையும், விவசாயத்தின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாரித் தெளித்தவர்களின் செயல்பாடே படைப்புழுக்களின் படையெடுப்பிற்கு காரணம் என்று கூறுகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பா ளர் அரச்சலூர் செல்வம். சமீபகாலமாக இயற்கை விவசாய முறைகளைக் கடைபிடித்துச் செய்யப்படும் பல்வேறு உணவுப்பொருள்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது.

பூச்சிக்கொல்லிகளையும், மற்ற வேதிப்பொருள் களையும் தெளிக்காது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயன்படுத்தாது உற்பத்திசெய்யப்படும் மக்கா சோளம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை படைப்புழுக்க ளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, ‘‘உண்மையான இயற்கை விவசாய முறைகளை கடைபிடிக்கும் எவருக்கும் இந்த படைப்புழுக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் அனைத்துவித சத்துக்களுடன் பிறப்பதைப் போன்று, ஒவ்வொரு தாவரத்துக்கும் அதற்கு ஏற்படும் சவால்களைச் சமாளிக்கும் திறன் உள்ளது. ஆனால், விளைச்சலை பெருக்கிக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டு தெளிக் கப்படும் வேதிப்பொருள்களால் சில ஆண்டுகளுக்கு அதிக வருமானத்தைப் பெறும் விவசாயிகள் வெகுவிரை வில் தங்களது மண்ணின் சத்துகளையும், பல்லாண்டு காலமாகச் சேர்த்து வைத்த வளத்தையும் இழக்கின்றனர். அதுமட்டுமன்றி, விவசாயிகளின் நண்பனாகத் திகழும் நன்மை செய்யும் புழுக்களைக் கொல்வதுடன், தரம் குறைந்த உணவு உற்பத்திக்கும் வழிவகுக்கின்றனர்.

மேலும், காலப்போக்கில் அனைத்துவித பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஏற்றதாக தங்களது உடலமைப்பை தகவமைத்து கொள்ளும் படைப்புழுக்கள் உள்ளிட்ட இன்னும்பிற தீமை செய்யும் பூச்சிகள் எதற்கும் கட்டுப்ப டாத நிலைக்கு உயர்ந்து விவசாயத் துறைக்கே அச்சு றுத்தலை ஏற்படுத்துகின்றன’’ என்று அவர் கூறுகிறார்.

படைப்புழுக்களை கட்டுப்படுத்தவே முடியாதா?
‘விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுபட்ட பயிர் வகைகளை முயற்சி செய்வதும், உழவு செய்தவுடன் வேப்பம் புண்ணாக்குகளை நிலத்தில் போடுவதும் படைப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீமை செய்யும் புழுக்கள், பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கும். அது மட்டுமின்றி, வரப்புப் பயிர்களையும், வேலிச் செடி களையும் வளர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து இலகுவாக விடுபட முடியும்.

செயற்கையான வழிகளைப் பார்க்கும்போது, இரவில் மட்டுமே அட்டகாசத்தில் ஈடுபடும் படைப்புழுக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மின் விளக்குகளை அமைத்து அவற்றைத் திசைதிருப்பி அனைத்தையும் பிடித்துவிடமுடியும்.

மேலும், பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்குக் தயாராகும்போது வெளியிடும் பெரோமோன் என்னும் திரவத்தைச் செயற்கையாக வெளிப்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை ஏமாற்றி அனைத்தையும் பிடிக்க முடியும். படைப்புழுக்களை அதன் வாழ்க்கைப் போக்கின் பல்வேறு நிலைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இப்படிப் பல இருக்கின்றன.

You might also like