side Add

இறுதிப்போட்டியில்- உடுவில் அணி வெற்றி!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த மென்பந்து வெற்றிக்கிண்ணத்தின் போட்டிகள் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று இறுதிபோட்டியுடன் நிறைவடைந்தன.

வடமாகாணத்தின் 32 அணிகள் பங்குபற்றிய குறித்த போட்டிகள் கனகராயன் குளம்பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் பருத்தித்தித்துறை வீனஸ் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தியது உடுவில் அணி. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உடுவில் அணியின் தலைவர் ஜஸ்ரின் துடுப்பெடுத்தத் தீர்மானித்ததற்கு அமைவாக உடுவில் அணியானது நிர்ணயிக்கப்பட்ட பத்து பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணிசார்பாக அதிக பட்சமாக ஜெசிந்தன் 29 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரணவன் 22 ஓட்டங்களைப்பெற்றார். பந்துவீச்சில் வீனஸ் அணி சார்பாக வினோதிஸ் இரண்டு இலக்குகளையும் நிறோஜன் இரண்டு இலக்குகளையும் கைப்பற்றினர்.

91 என்ற வெற்றியிலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை வீனஸ் அணியானது ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிவந்தாலும், அடுத்தடுத்து முக்கிய இலக்குகளை இழந்தது. ஒருகட்டத்தில் நாற்பத்து நான்கு ஓட்டங்களில் முக்கியமான ஐந்து இலக்குகளை இழந்து தடுமாறினாலும் வீனஸ் அணியுடைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான சாருஜன் மற்றும் பிரசாத் ஆகியோருடைய பொறுப்பான துடுப்பாட்டத்தின் மூலம் நிதானமாக ஓட்டங்களைக் குவித்தது.

இறுதிப் பந்துப்பரிமாற்றத்தில் 20 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் சாருஜன் இரண்டு 6 ஓட்டங்கள் ஒரு 4 ஓட்டங்களைப் பெற்றார் இறுதியில் 85 ஓட்டங்களைப் பெற்று5 ஓட்டங்களால் வீனஸ் அணி தோல்வியைத் தழுவியது.

அந்த அணிசார்பாக அதிக பட்சமாக சாரூஜன் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப்பெற்றார். பந்துவீச்சில் உடுவில் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அணித்தலைவர் ஜஸ்ரின் 3 இலக்குகளை கைப்பிற்றியிருந்தார்.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக உடுவில் அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெசிந்தனும், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக பருத்தித்துறை வீனஸ் அணியின் நிறோஜனும், தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக உடுவில் அணியின் அணித்தலைவர் ஜஸ்ரினும் தெரிவு செய்யப்பட்டனர்.

முதலிடத்தைப் பெற்ற அணிக்கு இருபத்தையாயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயமும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூபா பத்தாயிரம் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணமும், தொடர் ஆட்டநாயகனர்களுக்கு தலா மூவாயிரம் மற்றும் வெற்றிக்கிண்ணமும், சகல போட்டிகளுக்கான ஆட்டநாயகன் விருதுகளும் முதல் சுற்றில் வெற்றி பெற்ற சகல அணிகளுக்குமான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பஞ்சாட்சரம் கெங்கநாதன், முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அருளம்பலம் விநாயகமூர்த்தி, ஆகியோர் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

You might also like