எதைப் பெறப்­போ­கி­றோம்?

புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் கைவி­டப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அர­ச­மைப்­புத் திருத்­தம் ஒன்­றின் ஊடாக அதி­கா­ரப் பகிர்­வை­யா­வது கொண்டு வந்­து­விட முடி­யுமா என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முயன்று கொண்­டி­ருக்­கி­றது. பெரும் பகீ­ர­தப் பிர­யத்­த­னத்­தின் பின்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரை இந்­தத் திட்­டத்துக்கு இணங்க வைத்­தது கூட்­ட­மைப்பு.

இது தொடர்­பில் அரச தலை­வர் தலை­மை­யில் கூட்­டம் ஒன்­றும் நடத்­தப்­பட்­டது. வழக்­கம் போலவே அந்­தக் கூட்­டத்­தில் இந்­தத் திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய ஆவ­ணம் ஒன்­றைத் தயா­ரித்­துத் தரு­மாறு கேட்டு மூவர் கொண்ட குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது. ஆணைக்­கு­ழுக்­க­ளை­யும் ஆலோ­ச­னைக் குழுக்­க­ளை­யும் நிய­மிப்­ப­தில் உல­கப் புகழ் பெற்­ற­தல்­லவா இலங்கை, அத­னால் இதற்­கும் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது.

அதா­வது, புதிய அர­ச­மைப்­பில் எல்­லாத் தரப்­பு­க­ளா­லும் இணங்­கப்­பட்ட அதி­கா­ரப் பகிர்வு யோச­னை­க­ளில், நாடா­ளு­மன்­றத்­தில் சாதா­ரண பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்­றக்­கூ­டி­ய­வை­களை ஒருங்­கி­ணைத்து அதனை ஒரு அர­ச­மைப்­புத் திருத்­த­மாக முன்­வைப்­பது தொடர்­பாக அறிக்­கை­யி­டு­வ­து­தான் இந்­தக் குழு­விற்கு இடப்­பட்ட பணி.

அந்­தப் பணி இப்­போது முடிந்­து­விட்­டது என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இது தொடர்­பான அடுத்த கூட்­டத்துக்கு நேரம் ஒதுக்­கிக் கொடுத்­தா­ரா­னால் இந்த ஆவ­ணத்­தைப் பரி­சீ­லித்து முன்­னெ­டுத்­துச் செல்­வது தொடர்­பில் ஆரா­ய­மு­டி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அடுத்த அரச தலை­வர் தேர்­தலை இப்­போதே நடத்­த­லாமா, அப்­படி நடத்­தி­னால் தானே அதில் ஒரு வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­ட­லாமா என்­கிற யோச­னை­க­ளி­லும் முயற்­சி­க­ளி­லும் ஆழ ஊறிப் போயி­ருக்­கும் அரச தலை­வர் இப்­போ­தைக்கு அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பி­லான முயற்­சி­க­ளுக்­குப் பச்­சைக்­கொடி காட்­டு­வார் என்று எதிர்­பார்ப்­பது துர்ப்­ப­லமே!

இரண்­டா­வது பத­விக் காலத்­தில் ஆட்­சிக்கு வரப்­போ­வ­தில்லை என்று கூறிக்­கொண்டு வந்­த­வ­ரான அரச தலை­வர், இப்­போது எப்­படி இரண்­டா­வது பத­விக் காலத்­தைக் கைப்­பற்ற முடி­யும் என்று தீவி­ரம் காட்டி வரும் நிலை­யில் தமி­ழர்­க­ளின் தேவை­யான அதி­கா­ரப் பகிர்வு விட­யத்­தில் அவர் அக்­கறை காட்­டு­வார் என்று எதிர்­பார்ப்­பது அறி­வீ­லித்­த­னமே!

அப்­ப­டியே அவர் அக்­கறை காட்­டு­வ­தா­கக் காட்­டிக்­கொண்­டா­லும் அது காலம் கடத்­தும் உத்­தி­யாக மட்­டும் இருக்­குமே தவிர, உண்­மை­யான முயற்­சி­யாக இருக்­காது. அத்­த­கைய உத்­தி­யை­யும் அணு­கு­மு­றை­யை­யும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் இருந்து மற்­றொரு முறை தமி­ழர்­கள் கண்­டு­ணர்ந்த பின்­ன­ரும் மைத்­திரி நேர்­மை­யாக நடந்­து­கொள்­வார் என்று எதிர்­பார்ப்­ப­தில் அர்த்­தம் இல்லை.

மகா­பா­ர­தத்­தில் நாட்டை இழந்த பாண்­ட­வர்­கள், கௌர­வர்­க­ளி­டம் இருந்து 5 ஊர்­க­ளைக் கேட்­டார்­கள் அதில்­லா­த­போது கிரா­மங்­க­ளைக் கேட்­டார்­கள், அதில்­லா­த­போது 5 வீடு­க­ளை­யா­வது தாருங்­கள் என்று கேட்­டார்­கள். ஆனால் துரி­யோ­த­னன் அவற்­றைக் கொடுக்க மறுத்­து­விட்­டான்.

இப்­போது தமிழ்த் தலை­வர்­க­ளின் நிலை­யும் அது­தான். தனி நாடு கேட்­டார்­கள், அதில்­லை­யென்­ற­தும் கூட்­டாட்சி கேட்­டார்­கள், அது­வு­மில்­லை­யென்­ற­தும் அதி­கா­ரப் பகிர்­வா­வது தாருங்­கள் என்­கி­றார்­கள். பௌத்த, சிங்­க­ளப் பேரி­ன­வா­தம் அதெல்­லாம் தர­மு­டி­யாது என்று வீம்பு காட்டி நிற்­கின்­றது.

பாண்­ட­வர்­கள் தாம் இழந்த மண்ணை மீட்க போர்­தான் ஒரே வழி என்று முடி­வெ­டுத்­தார்­கள். ஆனால், இன்­றைய தமிழ்த் தலை­வர்­கள் அப்­ப­டி­யொரு முடிவை எடுக்­கப்­போ­வ­தில்லை என்­பது மட்­டும் தெளிவு. அப்­ப­டி­யென்­றால், இதற்­கும் கீழே இறங்­கிச் சென்று எதைப் பெறப்­போ­கி­றார்­கள்.

You might also like