ஓடுதளத்தில் தீப்பிடித்த விமானம்- 41 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷெரிமெட்யேவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையறங்கிய பயணிகள் விமானம் திடீரெனத் தீப்பிடித்தது. அதில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யேவ் விமான நிலையத்தில் இருந்து ஏரோபிளாட் என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் 73 பயணிகளுடன்
முர்மான்க்ஸ் நகரத்துக்குப் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில், இயந்திரக் கோளாறு இருப்பதை அறிந்த விமானி, மீண்டும் ஷெர்மெட்யேவ் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறங்க
அனுமதி கோரினார். அதற்கு விமான நிலைய அதிகாரிகள் சம்மதிக்கவே, விமானத்தை அவசரமாக தரையிறங்கினார்.

விமானம் தரையிறங்கிய போது, திடீரென விமானத்தில் தீ பிடித்தது. ஓடுதளத்தில் விமானம் வேகமாகச் செல்லும்போது தீ வேகமகப் பரவியது. விமானத்தில் தீப்பிடித்ததை அவதானித்த விமான
நிலைய தீயணைப்பு படையினர், மீட்புப்படையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

மேலும், விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டவுடன் அவசர வழியாக விமான ஊழியர்கள் பயணிகளை தப்பிக்க வைத்தனர். ஆனாலும், அனைத்து பயணிகளையும் அவர்களால் வெளியேற்ற முடியவில்லை. தீ வேகமாகப் பரவியதால், 2 குழந்தைகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 38 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக மாஸ்கோ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக் குறித்து அறிந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

You might also like