கூட்டமைப்பு -ஜே.வி.பி. இணைவு காலத் தேவை!!

0 307

மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயற் படும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் முடிவு செய்துள்ளன. இரண்டு கட்சிகளின் தலை வர்களும் கொழும்பில் கூடிப் பேசி இந்த முடிவை எட்டியுள்ளனர். பல கெட்டவற்றுக்குள்ளும் நடந்த நல்லது என்று இதை எடுத்துக்கொள்ளலாம்.

தலைமை அமைச்சராக இருந்தவரான ரணில் விக்கிரமசிங்கவை அவரது பதவியிலிருந்து நீக்கியமை, புதிய தலைமை அமைச்சராக மகிந்த ராஜபக்சவை நியமித்தமை என்பனவற்றின் பின்னணியில் பெரும் அரசியல் சதி இடம்பெற்றுள்ளது என்று இந்த இரண்டு கட்சிகளும் கருதுவதால் அதற்கு எதிராக அணி திரள்வதற்கு முடிவெடுத்திருப்பதாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தச் செயல் மக்களாட்சிக்கு எதிரானதுடன் மக்களின் இறைமையைப் பாதிக்கும் செயலுமாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்களாட்சிக்கு முரணான சதித் திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று எதிர்ப்பது என்றும் இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. அதாவது மக்களாட்சிக்கு முரணாகப் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்சவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து இந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்போகின்றன என்பதே இதன் சுருக்கமான தெளிவு.

கொழும்பில் தோன்றியிருக்கும் அதிகாரப் போட்டியில் தாம் யார் பக்கமும் இல்லை, நடுநிலை வகிக்கப்போகி றோம் என்று முன்னதாகத் தெரிவித்திருந்தது ஜே.வி.பி. அதுபோன்றே ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசு தொடரவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்த வகையிலான தத்தமது நிலைப்பாடுகளில் இருந்து வழுகி மகிந்தவை எதிர்ப்பது என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த இரண்டு தரப்புகளும் வந்துள்ளன. தாம் இப்போது எடுத்துள்ள நிலைப்பாடு எந்த வகையிலும் ரணிலுக்கான ஆதரவாக வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றன இந்த இரண்டு கட்சிகளும். அதனாலேயே மக்களாட்சிக்கு முரணான, அரசியல் சதிக்கு எதிராக ஒன்றிணையப்போவதாக அவை அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான இந்த ஒன்றிணைவுக்கான அடித்தளத்தைக் கடந்த சில காலங்களாகவே அவதானிக்க முடிந்திருக் கிறது. ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் நடத்திய தொழி லாளர் தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பங்கேற்றது முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லுறவை வளர்ப்பதில் ஜே.வி.பியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக ஈடுபாடு காட்டியது ஈறாக இதைக் காணலாம். அதன் தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக இணைவதற்கு இவை இரண்டும் முன்வந்துள்ளன.

எந்த உள்நோக்கத்துக்காக இருந்தாலும் சரி, இலங்கையில் பலமான மூன்றாவது அரசியல் சக்தி ஒன்றின் தேவை மிகையாக உள்ள நிலையில் இந்த இணைவு அதற்கான உறுதியான அடித்தளத்தை இடும் என்று எதிர்பார்க்கலாம். எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும்கூட இந்த மூன்றாவது அரசியல் சக்தியுடன் இணையும் ஒரு நிலை வருமாக இருந்தால், கொழும்பின் எந்தவோர் ஆட்சியையும் தீர்மானிக்கும் தெளிவான சக்தியாக இந்த மூன்றாம் தரப்பால் வளர முடியும். ஒரு நிலையில் ஐ.தே.க. அல்லது சு.கவுக்கு மாற்றாக எழுச்சி பெற முடியும்.

எனவே இந்தப் பாதையில் இரண்டு கட்சிகளுமே எத்தகைய சவால்கள் வந்தாலும் தொடர்ந்து உறுதியாகப் பயணிப்பது காலத்தின் தேவை.

You might also like