ஜமால் கொலை வழக்கு- ஐவருக்கு சாவுத் தண்டனை!!
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு சாவுத் தண்டனை விதிக்கப்பட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதியின் பிரபல பத்திரிகையாளரான ஜமால் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவிருந்த நிலையில் கடந்த மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற அவர் மாயமானார்.
இதனைத் தொடர்ந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது.
ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய துருக்கி, ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் முறைப்பாடுகளை அடுக்கியது.
ஜமால் கொல்லபட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்த சவுதி, துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களால் அவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் கைதான சவுதியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சாவுத் தண்டனை வழங்கப்பட உள்ளதாக சவுதி நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.