side Add

தாண்டவமாடப்போகும் இனவாத அரசியல்!

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுமாக இருந்தால் நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே. இதனைத் தடுப்பதற்குப் பெரும்பான்மையின மக்கள் அணி திரளவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார். போரை வெற்றி கொள்வதற்குப் பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்றே இந்த அரசியல் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்பதற்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் மகிந்த தரப்பினரின் அரசியல் செல்நெறி எந்த வகையில் இருக்கும் என்பதற்கான உதாரணம் அளுத்கமகே. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போன்று அளுத்கமகே தமது அரசியல் பாதையைத் தெளிவுப டுத்திக் காட்டியுள்ளார்.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பௌத்த சிங்கள இனவாதத்தைத் தூண்டி எரியவிட்டு அதில் குளிர்காய்வதன் மூலம் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு மகிந்த தரப்பினர் ஒருபோதும் தயங்கியதில்லை. புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியாக வழிகாட்டல் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் மகிந்த தரப்பினரும் உள்ளடக்கப்பட்டு விடயங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருந்தபோது, வழிகாட்டல் குழுவில் இணக்கமாகப் பேசிவிட்டு வெளியே சென்று மக்களுக்கு நாட்டைப் பிளவுபடுத்தப்பார்க்கிறார்கள் என்று பரப்புரை செய்தவர்கள்தான் மகிந்த தரப்பினர் என்பதை மறந்துவிடமுடியாது. எனவே அவர்களிடமிருந்து இதைவிட மேலான, முன்னேற்றகரமான அரசியலை எதிர்பார்க்க முடியாது.

அதேநேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறினால் மறுபுறத்தில் எப்படிப்பட்ட அரசியல் முன்னெடுக்கப்படப் போகிறது என்பதையும் இது உணர்த்தி நிற்கின்றது. ரணில் ஆட்சியைப் பிடிப்பதற்குக் கூட்டமைப்பு உதவுவதன் மூலம் அது சாதிப்பதற்கு நினைக்கும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியின் தொடர்ச்சி, அரசியல் கைதிகள் விடுவிப்பு, படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் விடுவிப்பு என்பனவற்றை இத்தகைய முரட்டுத்தனமான இனவாத அரசியலை எதிர்கொண்டு சாதிக்க முடியுமா என்பதுதான் இங்கு எழும் கேள்வி.

ஏனெனில் இத்தகைய இனவாத அரசியலுக்கு எதிராகத் துணிந்து நிற்கும் அரசியல் வல்லமை கொண்டவர் அல்லர் ரணில் விக்கிரமசிங்க. இனவாதம் காரணமாக மகிந்த தரப்புப் பக்கம் வாக்குகள் சரிந்துவிடும் என்கிற நிலமை ஏற்பட்டால் அதனைத் தடுக்க, நான்தான் புலிகளைப் பலவீனப்படுத்தினேன், போரை வெற்றி கொள்வதற்கான அடித்தளத்தைப் போட்டேன் என்று கூறிக்கொண்டு அதே இனவாதத்தின் பின்னால் செல்வதற்கு அவரது கட்சியும் தயங்காது; அவரும் தயங்கமாட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான பேச்சுக்களில் உள்ளக சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சித் தீர்வு ஒன்றைப் பரிசீலிப்பதற்குத் தயார் என்ற அறிவித்த ரணில்தான் இப்போது ஒற்றையாட்சியையும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதையும் வடக்கு –கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது என்பதையும் கூறிவருபவர் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒருவர் மகிந்த தரப்பினரின் தீவிர இனவாத அரசியலை எதிர்த்து நின்று தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவார் என்பதை நம்பமுடியுமா என்பதுதான் இங்குள்ள கேள்வி.

You might also like