திருந்தாத அரசியல்வாதிகள்
தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சு நடத்தி தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தீர்வு ஒன்றைக் காண்பேன் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அரச தலைவரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச. தமிழ்ப் பத்திரிகையாளர்களை நேற்றுச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.
பேச்சின் மூலம் எட்டப்படக்கூடிய தீர்வு எப்படிப்பட்டதாக அமையும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதனைப் பேச்சு ஊடாகத்தான் தீர்மானிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். புதிய அரசமைப்பு முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்திருக்கும் நிலையில் மகிந்த இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் விடயத்தில் சிங்கள ஆட்சியாளர்கள், தலைவர்கள் எத்தகைய அலட்சியத்தோடு, எடுத்தெறிந்து நடந்துகொள்கிறார்கள் என்பதற்கான மற்றொரு உதாரணம் மகிந்தவின் இந்தக் கருத்து.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆட்சியில் பிராந்தியங்களின் ஆட்சி தொடர்பான தீர்வுப் பொதி ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்க ப்பட்டபோது அந்த ஆட்சியில் அங்கம் வகித்தவர் மகிந்த. அதன் பின்னர் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வெளியிட்ட மகிந்த சிந்தனை என்கிற தேர்தல் அறிவிப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தீர்வு தொடர்பில் நீண்ட காலம் கூடி ஆராய்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை அவரின்முன்வைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் அங்கம் வகிக்காதபோதும் ஈபிடிபி போன்ற மகிந்த ஆதரவு தமிழ்க் கட்சி உட்படப் பல தமிழ்க் கட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அந்தத் தீர்வுத் திட்டத்தை என்ன, ஏது என்றுகூடப் பார்க்கவில்லை மகிந்த. அப்படியே தூக்கிக் கடாசி விட்டார். மிக அண்மைக் காலம் வரையில் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பான வழிகாட்டல் குழுவில் அவரது கட்சியும் ஓர் பங்காளியாக இருந்தது. குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படும் வரையில் இணக்கத்தோடு பங்கேற்று வந்தது. இடைக்கால அறிக்கை தயாரானதும்தான் முரண்படத் தொடங்கியது. இடைக்கால அறிக்கையோடு தமக்கு உடன்பாடில்லை என்று போர்க்கொடி தூக்கத் தொடங்கியது.
இவ்வாறு மூன்று சந்தர்ப்பங்களில் தீர்வு தொடர்பான முயற்சிகளில் நேரடியாகப் பங்கெடுத்து அவற்றைத் தயாரிப்பதில் உடனிருந்த மகிந்த ராஜபக்சதான் இப்போது நான்காவது முறையாகப் பேச்சு நடத்தித் தீர்வு ஒன்றைக் காணப் போகிறார் என்று சொல்கிறார்.
கேக்கிறவன் கேணயன் என்றால் கேப்பையில் நெய் வடியுமாம் என்கிற கதையாகத்தான் இருக்கிறது மகிந்தவின் கருத்துக்களும். மூன்று தடவைகள் வாய்த்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளாதவர் இனிதான் அதனைச் செய்யப் போகிறாராம். தமிழர்களின் பிரச்சினையை எவ்வளவு துச்சமாக மதித்திருந்தால் மகிந்த இதுபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பார்?
2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தோற்றபோதும் மகிந்த பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அவரது மமதை சற்றும் குறையவில்லை என்பதையுமே அவரது இந்தக் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இத்தகைய விகாரப்பட்ட மனோநிலையைக் கொண்ட தலைவர்களைக் கொண்ட ஓர் அரசியல் தரப்பிடம் இருந்து தமிழர்கள் தீர்வை எதிர்பார்ப்பது நடக்கக்கூடிய காரியம்தானா? அகிம்சை வழியில் மக்களாட்சி வழியில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழர்கள் எடுக்கும் முயற்சிகளை எள்ளி நகையாடுவதாகத்தான் பெரும்பாலான சிங்களத் தலைவர்களின் கருத்துக்களும் செயல்களும் இருக்கின்றன.
இதனைத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், சிங்களவர்கள் தாமாக முன்வந்து ஒருபோதும் தமிழர்களுக்குத் தீர்வைத் தரமாட்டார்கள் என்று தீர்க்கமாகத் தெரிவித்திருந்தார். தமது ஒவ்வொரு நகர்விலும் செயலிலும் சிங்களத் தலைவர்கள் அதனையே ஆணித்தரமாக நிரூபித்து வருகிறார்கள். இத்தகைய சிங்களத் தலைவர்களிடமிருந்து தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியுமா என்பதும் சந்தேகம்தான்.