நல்­லூ­ருக்கு மட்­டும் ஏன் இத்­தனை கெடு­பிடி?

வர­லாற்­றில் என்­றும் இல்­லாத வகை­யில் பெரும் பாது­காப்­புக் கெடு­பி­டி­க­ளு­டன் நல்­லூர்க் கந்­த­னின் உற்­ச­வம் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. போர்க் காலத்­தில்­கூட இல்­லாத அள­வுக்­குப் பாது­காப்பு நடை­மு­றை­கள் இறுக்­கப்­பட்டு ஆலய வளா­கம் பாது­காப்­புப் படை­யி­ன­ரின் பல­மான கண்­கா­ணிப்பு வளை­யத்துக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. ஆலய வளா­கம் மட்­டு­மன்றி ஆல­யத்துக்குச் செல்­லும் வழி­யி­லுள்ள பல்­வேறு இடங்­க­ளி­லும்­கூட பாது­காப்­புச் சோத­னை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஆல­யத்துக்குள் வழி­பாட்­டுக்­கா­கச் செல்­லும் பக்­தர்­கள் உட்­பட அனை­வ­ருமே உடல் சோத­னைக்கு உட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­ கி­றார்­கள். இத­னால் பக்­தர்­க­ளுக்­குத் தாம­த­மும் அசூ­சை­க­ளும் ஏற்­ப­டு­கின்­றன. உடல் சோத­னை­க­ளால் தமது புனி­தம் மாச­டை­கின்­றது என்­கிற கவ­லை­கூட ஒரு சில பக்­தர்­க­ளுக்கு ஏற்­ப­டத்­தான் செய்­கின்­றது. ஏன் இத்­தனை கெடு­பி­டி­கள்? பாது­காப்பு இறுக்­கங்­கள்? ஆல­யத்துக்கு வரும் பக்­தர்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை என்­கிற பதில் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை.

உயிர்த்த ஞாயிறு தற்­கொ­லைக் குண்டு வெடிப்­புப் படு­
கொ­லை­க­ளைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது பொதுப்­ப­டை­யான எதிர்­வு­கூ­ற­லாக இருந்­தா­லும், நல்­லூர் மட்­டுமே ஏன் இலக்கு வைக்­கப்­பட்­டது என்­கிற கேள்­விக்­கும் பதில் இல்லை. உயிர்த்த ஞாயிறு படு­கொ­லை­க­ளைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணத்­தில் பல புகழ்­பெற்ற ஆல­யங்­க­ளில் திரு­வி­ழாக்­கள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன வெகு அண்­மை­யில். அங்­கும் பல ஆயி­ரக்­க­ணக்­கான அடி­யார்­கள் திரண்­டி­ருக்­கின்­ற­னர். இன்­னும் சொல்­லப்­போ­னால் நல்­லூ­ரைப் போன்ற இட­வ­சதி அல்­லாத, மிகக் குறு­கிய இடத்துக்குள் பல ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் நெருக்­கி­ய­டிக்க வேண்­டிய நிலை­யில் உள்ள ஆல­யங்­க­ளில்­கூட திரு­வி­ழாக்­கள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. அங்­கெல்­லாம் ஓர் அசம்­பா­வி­தம் நடந்­தி­ருந்­தால் பாதிப்பு மிகப் பயங்­க­ர­மா­ன­தாக இருந்­தி­ருக்­கும். ஆனால் அத்­த­கைய இடங்­க­ளில் வழ­மைக்கு மாறான எந்­தப் பாது­காப்பு ஏற்­பா­டும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை. அப்­ப­டி­யி­ருக்க, நல்­லூ­ரில் மட்­டும் ஏன் இத்­தனை அடுக்­குப் பாது­காப்பு?

நல்­லூ­ரில் கூடு­கின்ற சனக்­கூட்­டம் அதி­க­மா­ன­து­தான்,
இல்­லை­யென்று யாரும் சொல்­லப்­போ­வ­தில்லை. அசம்­பா­வி­தம் ஏற்­பட்­டால் அழிவு பெரி­தாக இருக்­கும் என்­ப­தி­லும் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. அதே­நே­ரம் வேறு புகழ்­பெற்ற ஆல­யங்­க­ளி­லும் அத்­த­கை­ய­தொரு நிலை ஏற்­பட்­டால் பாதிப்பு இல்­லா­மல் போய்­வி­டாது. எங்­காக இருந்­தா­லும் உயிர்­கள் உயிர்­கள்­தான். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது என்­று­ மில்­லா­த­வாறு நல்­லூ­ருக்கு மட்­டும் ஏன் இத்­தனை பாது­காப்பு?

நல்­லூர் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­க­லாம் என்­ப­தான புல­னாய்­வுத் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் இத்­த­கைய பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் ஏது­மில்லை. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது ஏன் இந்­தப் பாது­காப்பு? யார் இதனைக் கோரி­ய­வர்­கள்?

பாது­காப்பு விட­யங்­க­ளில் அசண்­டை­யாக இருக்­க­மு­டி­யாது, ஏதா­வது நடந்­து­விட்­டால் அதன் பின்­ன­ரும் விமர்­சிப்­பார்­கள், எனவே வரு­முன் காப்­பது நல்­ல­து­தானே என்று கூறு­ப­வர்­க­ளும் இருக்­கவே செய்­கி­றார்­கள். அந்த வரு­முன் காப்பு நட­வ­டிக்­கை­கள் ஏன் ஏனைய மதத் தலங்­க­ளில் இல்­லா­மற்போ­னது என்­ப­து­தான் அவர்­க­ளுக்­கான கேள்வி? எல்லா இடங்­க­ளி­லும் வரு­முன் காத்­தி­ருக்க வேண்­டு­
மல்­லவா?

போருக்­குப் பிந்­தைய காலங்­க­ளில் யாழ்ப்­பா­ணத்துக்குள் நுழைந்த தெற்­குச் சுற்­று­லா­வி­கள் மற்­றும் தெற்கு வணிக நிறு­வ­னங்­க­ளி­னால் நல்­லூர் மெல்ல மெல்ல யாழ்ப்­பா­ணத்­தின் குறி­யீ­டாக, விம்­ப­மாக மாற்­றப்­பட்டு வந்த பின்­ன­ணி­யு­டன் இந்­தச் சோத­னைக் கெடு­பி­டி­க­ளை­யும் இணைத்­துப் பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­யம். அச்­ச­மூட்­டல்­க­ளும் அசூ­சை­க­ளும் பக்தர்­களை ஆல­யத்­தி­லி­ருந்து தூர விலக்கி வைக்­கும் என்­ப­தை­யும் மறந்­து­வி­ட­லா­காது.

You might also like