பிரதேச செயலாளருக்கு -10 வருடங்கள் கடூழியச் சிறை!!

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பத்து வருட கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழியச் சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும், அதனை வழங்காவிட்டால் ஒரு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சதக்கத்துல்லாஹ் ஹில்மி திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்த வேளையில், உயிரிழந்த பெண் அதே அலுவலகத்தில் கடமையாற்றியுள்ளார். அவர்களுக்கு இடையில் காதல் தொடர்பு கொலையில் முடிந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like