பிரபாகரன் என்கிற தவிர்க்க முடியாத ஆளுமை!!
இலங்கையில் நடப்பது மக்களாட்சியா(ஜனநாயகமா), இல்லையா? என்கிற குழப்பத்துக்குள் கொழும்பு அரசியல் சிக்கிக் கொண்டிருக்கையில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்ற ஒரு பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் இருந்திருந்தால் கொழும்பில் இன்று இந்தப் பிரளயம் எதுவும் நிகழந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதைச் சிங்களவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தளவுக்கு ஒட்டுமொத்த இலங்கையின் அரசியலையும் தீர்மானிக்கும் அசாத்திய மனிதனாக வரலாற்றில் தன்னை ஆழமாகப் பதித்த ஒரு தலைவன் பிரபாகரன்.
எண்ணிக்கையில் மிகச் சிறிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து முகிழ்த்து, ஒட்டுமொத்த உலகத்தையும் தனது படைத்துறை வீரத்தால் திரும்பிப் பார்க்க வைத்த வீரத் தமிழன் என்று பிரபாகரனைப் புகழ்வதில் தவறேதும் இல்லை. பிரபாகரனின் போராட்ட வழிவகைகள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். அவரது போராட்ட வழிமுறைகள் பலதும் இந்த உலகால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். பலருக்கும் உலகுக்கும் அவர் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தன்னலமற்ற, மக்களின் விடுதலைக்காக நேர்மையாகச் சிந்தித்த, எப்போதும் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காத, எத்தகைய இடர்வரினும் தளர்ந்துவிடாத ஒரே தமிழ்த் தலைவன் பிரபாகரன்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அத்தகைய ஒரு தலைவனின் பிறந்த நாள் இன்று. போராட்டக் களத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரபாகரனை நீக்கிவிட்டு ஈழத் தமிழர்களின் தீர்வு பற்றி ஒருவராலும் சிந்திக்க முடியாது.
பிரபாகரன் மீதான மிகப் பெரிய விமர்சனம், அமைதித் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பலவற்றை அவர் தவறவிட்டார் என்பது. அவரை வன்னியில் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசிகூட அண்மையில், பிரபாகரனின் மனது போர் வெற்றிகளால் நிரம்பியிருந்தது, அவர் அதீத தன்னம்பிக்கை மிக்கவராக இருந்தார் என்று தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்ல, ஆயுத பலம் இருக்கும் போதே நல்லதொரு தீர்வைப் பெற்றுகொள்வதற்குப் பிரபாகரன் மறுத்து வந்தார், அதுவே தமிழர்களின் பின்னடைவுகள் எல்லாவற்றுக்கும் காரணம் என்று விமர்சிப் போர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள்.
ஆனால், சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்குத் தாமாக ஒருபோதும் ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதில் பிரபாகரன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இதை அவர் பல தடவைகள் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கிறார். அந்த நம்பிக்கையின் மீதுதான் அவரது ஒட்டுமொத்த அரசியலும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அவர் சிங்கள அரசுகளுடன் எப்போதுமே ‘நம்ப நட நம்பி நடவாதே’ என்கிற கொள்கையோடு செயற்பட்டார். அவரது நம்பிக்கை வீண்போனதில்லை என்பதைக் காலம் இன்றளவும் நிரூபித்து பிரபாகரனுக்கு நன்றிக் கடன் செலுத்துகின்றது.
மைத்திரி -– ரணில் ஆட்சி வந்தபோது வரலாற்றில் என்றுமேயில்லாத ஒரு வாய்ப்பு இது, தமிழர்களுக்குத் தீர்வு ஒன்று சாத்தியமாகிவிடும் என்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ‘‘இந்த வரலாற்று வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது’’ என்று திரும்பத் திரும்பக் கூறிவந்தார். தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களத் தலைவர்களுக்கும்தான் அவர் அப்படிச் சொல்லிவந்தார். ஆனால், நடந்தது என்ன? புதிய அரசமைப்புக்கான வரைவைக்கூட நாடாளுமன்றத்தில் முன்வைக்க ‘வரலாற்று வாய்ப்பால்’ முடியாமல் போய்விட்டது.
பிரபாகரன் இருக்கும்போது உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்குத் தருவதற்கு இணங்கிய ரணில் விக்கிரமசிங்க, இன்று தமிழர்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகிறார் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிற அரசியல் வட்டத்துக்குள்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இப்படித்தான் என்பதை மிகச் சரியாகக் கணித்ததன் காரணமாகத்தான் பிரபாகரன் போரை மட்டுமே நம்பியிருக்க, ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. சிங்களத் தலைவர்களை இந்தளவு தூரத்துக்கு ஆழகமாகக் கணிப்பிட்டு அரசியல் நடத்திய ஆளுமை மிக்க ஒரே தமிழ்த் தலைவன் பிரபாகரன் மட்டுமே. அதனாலேயே அவருக்கு வரலாற்றில் அழிக்க முடியாத இடம்.