புலமைப் பரிசில் நிறுத்தம்- வரவேற்புக்குரிய நகர்வு!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்திவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். பொலன்னறுவையில் நடந்த பாடசாலை நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தனது ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரச தலைவர் தெரிவித்தார்.

புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்திவிடுவது என்கிற அரச அறிவிப்பு இதுவரையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது வரவேற்புக்குரியதே! அதுவும் அரச தலைவரின் ஆலோசனைக்கமைய அது நடைபெறுமாக இருந்தால் மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் அவர் உருப்படியாகச் செய்த மிகச் சிறந்த செயலாகவும் இதுவே இருக்கும்.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நிறுத்தப்படவேண்டும் என்று நீண்ட காலமாகவே சமூக ஆர்வலர்களாலும் உளவியலாளர்களாலும் வலியுறுத்தப் பட்டு வருகின்றது. மாணவர்கள் தமது இளமைப் பருவத்தை அனுபவிக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு இந்தப் பரீட்சை நெருக்கடியைக் கொடுக்கின்றது என்கிற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது.

அண்மைக் காலமாக இந்தப் பரீட்சை மாணவர்களுக்குரியதாக மட்டுமன்றி அவர்களைப் பெற்றவர்களின் கௌரவத்தோடு தொடர்புடையதாகவும் பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தமது கௌரவத்துக்காகவே சிறுவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் என்று நெருக்குதல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் மாணவர்களின் சுமை இரட்டிப்பானது.
இது மாணவர்களின் எதிர்காலத்தையும் உளவியலையும் அதிகம் பாதிக்கின்றது என்கிற கண்டனங்களும் தெரி விக்கப்பட்டன. மாணவர்களை இவ்வளவுக்குத் துன்பப்படுத்துமளவுக்கு இந்தப் பரீட்சை ஒன்றும் முக்கிய தடை தாண்டல் பரீட்சை அல்ல என்பதால் இதனை உடனே நிறுத்திவிட வேண்டும் என்கிற வலியுறுத்தல் கணிசமாக இருந்தது.

ஆனால், போட்டி மிக்க இந்த உலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையை ஒன்றும் மோசமானது அல்ல என்று வாதிடுவோர் பலரும் இருக்கவே செய்கின்றனர். மாணவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் போட்டிக்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் இந்தப் பரீட்சை இருக்கும் என்றும் இதனை நிறுத்துவதன் மூலம் மாணவர் சமுதாயம் பாதிக்கப்படும் என்றும் கருத்துக் கூறியவர்களும் இருக்கின்றார்கள்.

இதனை அடுத்தே கடந்த பல வருடங்களாகப் புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதா இல்லையா என்கிற விவாதம் நீண்டு சென்றது. இப்போது அது முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அரச தலைவர் கூறியதைப் போலவே புலமைப் பரிசில் பரீட்சை நிறுத்தப்பட்டால் அது மாணவர்கள் மீதான நெருக்கீட்டைக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனேகமான பெற்றோருக்கும் சற்று நிம்மதியைத் தரும்.

ஏழை மாணவர்களும் நகரப்புற வசதி படைத்த பாடசாலைகளில் படிப்பதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்தப் புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் பக்க விளைவுகள் இந்தச் சமூகத்தை மிக மோசமாகப் பாதிக்கச் செய்வனவாக வளர்ந்து வந்த காரணத்தால் அதனை நிறுத்திவிடுவதே மேலானது.

உலகிலேயே தரமான கல்வியை வழங்கக்கூடிய பின்லாந்து போன்ற நாடுகளில் இடைநிலைக் கல்வி வரையில் மாணவர்களுக்குப் பரீட்சைகளே கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வெறும் போட்டிப் பரீட்சைகள் மட்டுமே மாணவர்களை வளம்படுத்திவிட மாட்டா. கல்வியின் தரத்தையும் கற்பித்தல் முறையின் உயர்வையும் இலக்காகக் கொண்ட திட்டங்கள் மூலமே அடுத்த தலைமுறையினரிடம் கல்வியை வளம்படுத்த முடியும்.

You might also like