வெட்­கக்­கேடு!

வடக்­கில் முழு­மை­யான படை விலக்­கல் என்­பது சாத்­தி­ய­மல்ல என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் பாது­காப்பு நிழல் அமைச்­சர் ருவான் விஜே­வர்த்­தன. கொழும்­பில் இருந்து வெளி­யா­கும் ஆங்­கில ஊட­கம் ஒன்­றுக்கு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

தேசிய பாது­காப்பு, எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கார­ணங்­க­ளால் முப்­ப­டை­கள் மற்­றும் பொலி­ஸா­ரைத் தமது இடங்­க­ளில் இ­ருந்து ஏனைய இடங்­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என்று கேட்க முடி­யாது என்­றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இதே கருத்தை தரைப்­ப­டை­யின் பேச்­சா­ளர் பிரி­கே­டி­யர் சுமித் அத்­தப்­பத்­து­வும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். ஆங்­கில வாரப் பத்­தி­ரிகை ஒன்­றுக்கு அவர் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். வடக்கு மாகா­ணத்­தில் இருந்து தரைப்­ப­டையை முழு­மை­யாக விலக்­கும் கோரிக்­கையை நிறை­வேற்ற முடி­யாது,படை­களை விலக்­கு­மாறு அரசு தெரி­வித்­தால்­கூட அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சாத்­தி­யம் இல்லை என்று கூறி­யி­ருக்­கி­றார் அவர்.

வடக்­கி­லி­ருந்து படை­யி­னரை அகற்ற முடி­யாது என்­கிற இந்­தக் கருத்­துக்­கள் திடீ­ரெ­னப் பொங்கி வழி­வ­தற்­குக் கார­ண­மாம், போர் முடிந்து 10 ஆண்­டு­க­ளா­கி­விட்ட நிலை­யில் வடக்­கி­லி­ருந்து படை­யி­னரை விலக்­கிக்­கொள்­வது தொடர்­பாக அர­சி­யல் ரீதி­யான முடிவை கொழும்பு ஆட்­சி­யா­ளர்­கள் எடுக்­க­வேண்­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்த கருத்­துத்­தான்.

சிங்­கள, பௌத்த தேசிய வாதத்­துக்கு நெருக்­க­மா­ன­வர், தமிழ் பௌத்­தர், என்­கிற கணிப்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் கொழும்­பின் ஆட்­சி­யா­ளர்­க­ளால் கலா­நிதி சுரேன் ராக­வன் வடக்­கின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டார். இங்கு வந்து நில­மை­களை நேரில் ஆராய்ந்து, மக்­க­ளின் கருத்தை அறிந்து அவர் முன்­வைத்த ஒரு கருத்­துக்கே படை­யி­னர் மற்­றும் பாது­காப்பு நிழல் அமைச்­சர் ஆகி­யோர் அதி உச்ச எதிர்­வி­னை­யாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.

இத்­த­னைக்­கும் வடக்­கி­லி­ருந்து படை­யி­னரை முற்­றாக விலக்­கிக் கொள்­ளு­மாறு வடக்கு ஆளு­நர் வலி­யு­றுத்­த­வில்லை. மக்­க­ளின் காணி­கள் படை­யி­ன­ரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், அந்த காணி­களை தமக்­குத் திருப்­பித் தரு­மாறு கேட்டு மக்­கள் தொடர்ச்­சி­யாக நடத்­தி­வ­ரும் போராட்­டங்­க­ளுக்­கான தீர்­வாக படை விலக்­கல் தொடர்­பில் அர­சி­யல் தீர்­மா­னம் வேண்­டும் என்று ஆளு­நர் வலி­யு­றுத்­தி­னார் என்றே கொள்ள முடி­யும். அப்­படி வடக்­கி­லி­ருந்து படை­யி­னர் முழு­மை­யாக வெளி­யேற வேண்­டும் என்­கிற கடும்­போக்­கு­வா­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்­தக்­கூ­டிய ஒரு­வ­ராக இருந்­தி­ருந்­தால் கொழும்பு அவரை ஆளு­ந­ராக நிய­மித்­திருக்­காது என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.

மறு­பு­றத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கூட வடக்­கில் இருந்து படை­யி­னர் முற்­றாக வெளி­யேற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­ய­தில்லை. 1980களில் படை­யி­னர் இருந்த எல்­லை­க­ளுக்கு அவர்­கள் மீள வேண்­டும் என்­று­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்ட கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் வலி­யு­றுத்தி வந்­த­னர். அண்­மைக் காலங்­க­ளாக அந்­தக் கோரிக்­கை­யைக்­கூட அவர்­கள் வலி­யு­றுத்­தி­ய­தில்லை. கடந்த ஒரு வருட காலத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில்­கூட அவர்­கள் இது தொடர்­பா­கக் குரல் எழுப்­பி­ய­தில்லை.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது படை­யி­னரை முற்­றாக விலக்க முடி­யாது என்­றும், தேசிய பாது­காப்­புக் கருதி படை­யி­னரை இப்­போது இருக்­கும் முகாம்­க­ளில் இருந்து இடம்­மாற்ற முடி­யாது என்­றும் அப்­ப­டிப் படை­யி­னர் இருப்­பது அச்­சு­றுத்­தல் என்று கருத்­தும் மக்­க­ளைத்­தான் இடம்­மாற்­ற­வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் பாது­காப்பு நிழல் அமைச்­சர் கூறி­யி­ருப்­பது கடும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.

வடக்­கி­லி­ருந்து படை விலக்­கல் என்­பது 2015ஆம் ஆண்டு ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்­காக மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஆகி­யோர் வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­மாறு எழுப்­பப்­ப­டும் குரல். மக்­க­ளின் காணி­கள் அனைத்­தும் மக்­க­ளி­டமே திருப்பி வழங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தார்­கள் அவர்­கள். அத­னையே தமிழ் மக்­கள் இப்­போ­தும் வலி­யு­றுத்­து­கி­றார்­கள். போர் முடிந்த பின்­ன­ரும் மக்­க­ளின் காணி­களை ஆக்­கி­ர­மித்து வைத்­துக்­கொண்டு படை­யி­னர் விவ­சா­யம் செய்­வ­தும், தொழில் முயற்­சி­க­ளில் ஈடு­ப­டு­வ­தும் தேசிய பாது­காப்­புக்கு அவ­சி­யம் என்று சொல்­லும் ஓர் பாது­காப்பு நிழல் அமைச்­சர் இருப்­பது இந்த நாட்­டுக்கே வெட்­கக்­கேடு!

You might also like