சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான மகாலிங்கம் சசிக்குமாரை (சுவிஸ்குமார்) தப்பிக்க வைக்க முயன்றார் என்று மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோனாதிராசாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகின்றது என்று தெரியவருகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாவிட்டபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனிடம் சில மாதங்களுக்கு முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெறும் இந்த வழக்கில் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோர் சந்தேகநபர்களாக உள்ளனர்.

லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களின் பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். சிறிகஜன் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். அதையடுத்து சிறிகஜனுக்கு பகிரங்கப் பிடியாணை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like