side Add

தமிழர்களின் தேவைகளை- புதிய ஆளுநர் நிறைவேற்ற வேண்டும்!!

புதிய ஆளுநரர் தமிழ் மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என்று வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதியால் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் சுரேன் ராகவன் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

வடக்கு கிழக்கில் நியமிக்க வேண்டிய ஆளுநர்கள் தமிழ் பேசும் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கல்விமான், சிறந்த ஆய்வாளன், இலங்கை தேசிய இனத்தின் வரலாற்றைப் புரிந்து கொண்டவன் தமிழன் ஆளுநராக நியமிக்கப்பட்டதையிட்டுப் பெருமைப்படுகின்றோம்.

வடக்கு மாகாணத்தின் உணர்வுகள், தேவைகள், அபிலாசைகள், அரசியல் இலக்குகளை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஆளுநர் செயலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் வரலாற்றுத் தொடர்பை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

வடமாகாண சபை சார்ந்து அல்லது வடமாகாண சபை முறைமை சார்ந்து ஒரு அரசியல் தலைமைத்துவம் அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சூழ்நிலையில் நாட்டின் 6 மாகாணங்களில் அரசியல் வெற்றிடம் காணப்படுகின்றது.

அவ்வாறே வெற்றிடமாகப் பார்க்காமல் இங்குள்ள மக்களின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதிநிதிகளையும் அழைத்து கருத்து அறிந்து கொண்டு, அணைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று சிறந்த நிர்வாகத்தினை நிறைவேற்ற வேண்டும்.

எந்த இனத்தைச் சேர்ந்தவர் ஆளுநராகச் சென்றாலும், அந்த மாகாணத்தைச் சார்ந்தவராக மாற வேண்டுமென்பதே தேவை.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது மக்களின் தேவைகளை அறிந்து அவ்வாறே புதிய ஆளுநர் செயற்பட வேண்டும்- என்றார்.

You might also like