side Add

பொலிஸ் அதிகாரங்களை  வழங்குவதே தீர்வாகமுடியும்

வடக்­கில் பணி­யாற்­றும் பொலி­ஸார் குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுப்­ப­தற்­குத் தவ­று­கி­றார்­கள் என்ற சாரப்­ப­டும் குற்­றச்­சாட்டு மீண்­டும் எழுப்­பப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே நடத்­திய கூட்­டத்­தில் அரச அதி­கா­ரி­கள் இந்­தக் குற்­றச்­சாட்டை எழுப்­பி­யி­ருக்­கி­றார்­கள்.

அண்­மை­யில் வடக்­குக்கு வந்­தி­ருந்த கொழும்­பின் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் ரஞ்­சித் மத்­தும பண்­டார மற்­றும் பொலிஸ் மா அதி­பர் ஆகி­யோ­ரி­டம் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னும் இதை­யொத்த குற்­றச்­சாட்­டைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

குற்­ற­வா­ளி­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பைப் பொலி­ஸார் பேணு­கின்­ற­னர் என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார். சில நாள்­க­ளுக்கு முன்­னர் தென்­ம­ராட்­சிப் பகு­தி­யில் கைது செய்­யப்­பட்ட வாள்­வெட்­டுச் சந்­தே­க­ந­பர்­கள் சில­ரின் அலை­பே­சி­க­ளில் இருந்து பொலி­ஸார் சில­ருக்கு அடிக்­கடி அழைப்­பு­கள் எடுக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­தி­ருந்­தது.

தற்­போது, மணல் கொள்ளை, பண்­பாட்­டுச் சீர­ழி­வு­கள், போதைப் பொருள் வியா­பா­ரம் என்­பன தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு ஆதா­ரங்­க­ளு­டன் தக­வல்­கள் வழங்­கப்­பட்­டா­லும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு பொது அதி­கா­ரி­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தொடர்ச்­சி­யாக எழுப்­பப்­பட்­டு­வ­ரும் இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக் கள், பொலி­ஸார் பொது­மக்­க­ளின் காவ­லர்­க­ளாக இருப்­ப­தை­விட குற்­ற­வா­ளி­க­ளின் காவ­லர்­க­ளாக இருக்­கி­றார்­களோ என்­கிற சந் தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அதி­லும் போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் வடக்­கில் குற்­றங்­கள் சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன என்­பது வெளிப்­ப­டை­யா­கத் தெரி­யும் நிலை­யில் பொலி­ஸா­ரின் உதவி, அனு­ச­ர­ணை­யின்றி அல்­லது அவர்­க­ளின் செயற்­றி­றன் இன்மை கார­ண­மா­கவே குற்­றங்­கள் இந்­த­ள­வுக்­குப் பெரு­கு ­கின்­றன என்­பதை ஊகித்­த­றி­வ­தற்கு எவ­ரொ­ரு­வ­ருக்­கும் அதி­புத்­தி­சா­லித்­த­னம் தேவை­யில்லை.

இங்கு கட­மை­யில் இருக்­கும் பொலி­ஸார் புத்­தி­சா­லித்­த­ன­மற்­ற­ வர்­களோ செயற்­றி­ற­னற்­ற­வர்­களோ இல்லை என்­பதை அவர்­கள் அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்­தத் தவ­ற­வில்லை என்­ப­தும் கண்­கூடு. வாள்­வெட்­டுக் குழு­வி­னால் இரு பொலி­ஸார் வெட்­டப்­பட்­ட­போது ஒரு சில வாரங்­க­ளில் சந்­தே­க­ந­பர்­கள் அனை­வ­ரை­யும் கொழும்பு வரை சென்று கைது செய்­தார்­கள்.

அதே­போன்று விடு­த­லைப் புலி­க­ளின் மீளு­ரு­வாக்க நட­வ­டிக்­கை­கள் என்று சொல்­லப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் பல­வற்­றை­யும் அவர்­கள் திறம்­ப­டக் கண்­ட­றிந்து அவற்றை முறி­ய­டிக்­கத் துணை நின்­றி­ருக்­கி­றார்­கள். எனவே அவர்­க­ளி­டம் போதிய புத்­தி­சா­லித் தன­மும் செயல்­தி­ற­னும் இல்லை என்று சொல்­லி­விட முடி­யாது. அதனை மக்­கள் சார்ந்த விட­யங்­க­ளில் பயன்­ப­டுத்த மறுக் கி­றார்­கள் என்­ப­து­தான் உண்மை.

போர் நடந்­த­போது அதில் பொலி­ஸா­ரும் ஓர் அங்­க­மாக மாற்­றப்­பட்­டி­ருந்­தார்­கள். அவர்­க­ளும் போர் இலக்கு என்­கிற அடிப்­ப­டை­யில் அவர்­கள் முப்­ப­டை­யி­ன­ருக்­கும் நிக­ரான போர்க் குணத்­து­ட­னும் பயிற்­சி­யு­ட­னும் வளர்க்­கப்­பட்­டார்­கள். அந்த மனோ­நி­லை­யில் இருந்து போருக்­குப் பின்­ன­ரான இந்­தப் 10 ஆண்­டு­க­ளி­லும் அவர்­கள் மீண்டு வர­வில்லை என்­பது பொலி­ஸா­ரின் இந்­தப் போக்­குக்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம்.

தமி­ழர்­கள் மற்­றும் தமிழ் பேசும் சிறு­பான்­மை­யி­னர் போதி­ய­ள­வில் பொலிஸ் படை­யில் இல்­லா­மல் இருப்­ப­தும் இருக்­கும் சில நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­க­ளும் இள­நி­லைக் காவ­லர்­க­ளா­க­வும் நடு­நிலை அதி­கா­ரி­க­ளா­க­வும் மட்­டுமே இருக்­கி­றார்­கள் என்­ப­தும் அவர்­கள் தமது சிங்­கள மேல­தி­கா­ரி­க­ளின் சொற்­படி கேட்டு நடக்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள் என்­ப­தும் ஒரு கார­ண­மாக இருக்­க­லாம்.

எல்­லா­வற்­றுக்­கும் மேலாக கொழும்பு அதி­கார மையத்­திற்கு மட்­டுமே விசு­வா­ச­மாக இருப்­பது மட்­டுமே முக்­கி­யம் எனக் கரு­தும் மேல­தி­கா­ரி­க­ளால் பொலிஸ் துறை நிறைந்­தி­ருப்­ப­தும் இதற்­கொரு முக்­கிய கார­ண­மாக இருக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

மாகாண முத­ல­மைச்­ச­ருக்கோ அர­சுக்கோ பொறுப்­புக்­கூ­றும் தேவை­யும் அச்­ச­மும் அவர்­க­ளுக்­குக் கிடை­யாது. எனவே தான் மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன் அவர்­கள் வடக்­கில் இயங்­கு­கி­றார்­களோ என்று அச்­சப்­ப­டு­வ­தற்கு எல்­லா­வ­கை­யான நியா­யங்­க­ளும் உண்டு.

மாகாண சபை­க­ளுக்கு முழு­மை­யான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தன் மூலமே இந்­தப் பிரச்­சி­னையை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ர­மு­டி­யும். அப்­போ­து­தான் தமிழ் மக்­க­ளின் குறை­களை, கவ­லை­களை அக்­க­றை­யோடு கேட்டு நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டிய ஒரு பொலிஸ் படையை உரு­வாக்க முடி­யும். மாகா­ணங்­க­ளுக்­குப் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளைக் கொடுக்­கக்­கூ­டாது என்று வாதி­டு­ப­வர்­கள் இத­னைக் கவ­னத்­தில் எடுக்­க­வேண்­டும்.

You might also like