மீண்டு வரும் சாதி!

வர­ணி­யில் உள்ள ஆல­யம் ஒன்­றில் மண் அள்­ளப் பயன்­ப­டும் ஜே.சி.பி. இயந்­தி­ரத்­தின் மூலம் தேர் இழுக்­கப்­பட்­டது என்­கிற செய்­தி­யைத் தொடர்ந்து தமி­ழர்­கள் மத்­தி­யில் உள்ள சாதி முறைமை குறித்த கதை­யா­டல்­கள் சமூக வலைத் தளங்­க­ளில் பல­மாக ஒலிக்­கின்­றன. புலத்­தி­லும் அதன் சல­ச­லப்­பைக் கேட்க முடி­கின்­றது.

ஆலய வீதி­யின் ஓரி­டத்­தில் காணப்­ப­டும் இடக்­கு­மு­டக்­கான வளை­வில் வடம் கொண்டு தேரை இழுக்க முடி­யாது என்­ப­தால், இயந்­தி­ரம் கொண்டு அதனை இழுக்க முடிவு செய்­த­தா­க­வும், ஆல­யத்தை வணங்­கும் அனைத்­துத் தரப்பு மக்­க­ளும் இணைந்தே அந்த முடிவை எடுத்­த­தா­க­வும், இது ஒரு சாதி­யப் பிரிப்பு நட­வ­டிக்­கை­யின் அங்­கம் அல்ல என்­றும் ஆலய நிர்­வா­கம் சார்­பில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­ற போ­திலும், தேரை இயந்­தி­ரம் இழுத்­து­வ­ரும் ஒளிப்­ப­டங்­கள் வெளி­யா­ன­தைத் தொடர்ந்து சாதி பற்­றிய விவா­தங்­கள் மீண்­டும் ஒரு தடவை மடை திறந்­தி­ருக்­கின்­றன.

இன்­றும்­கூ­டப் பல ஆல­யங்­க­ளிலே சாதிப் பாகு­பாடு இருப்­ப­தைக் கண்­கூ­டா­கக் காண­லாம் என்று சைவ மகா சபை­யும் தெரி­வித்­தி­ருக்­கி­றது. அந்த நில­மையை மாற்­று­வ­தற்­குப் எவ­ரும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றும் சபை­யின் பொதுச் செய­லா­ளர் தனது வருத்­தத்­தை­யும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

தமி­ழர்­கள் மத்­தி­யில் வேரோ­டிப் போயி­ருக்­கும் சாதி­யம் போர்க் காலங்­க­ளில் கொஞ்­சம் அடங்­கிப் போயி­ருந்த நிலை­யில், போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் மீண்­டும் தளிர்த்­துத் தலை­யெ­டுக்­கி­றதா என்­கிற கேள்­வியை இந்த விவா­தங்­க­ளும் செய்­தி­க­ளும் எழுப்­பு­கின்­றன. சாதி­கள் இல்­லை­யடி பாப்பா என்­றார் மகாகவி பாரதி. ஆனால், அவர் காலத்­திற்­குப் பின்­னும் சாதியை விட்­டு­வி­டா­மல் இறுக்­கப் பற்­றிப் பிடித்­துக்­கொண்டு திரி­கின்­றது தமிழ் இனம்.

போர்க் காலங்­க­ளில், குறிப்­பாக தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் ஆட்­சிக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் சாதிய ஒழிப்பு என்­பது உளச்­சுத்­தி­யோ­டான அர­சி­யல் கொள்­கை­யாக இருந்­தது. அத­னால் சாதி­யம் தமி­ழர்­கள் மத்­தி­யில் கொஞ்­சம் கட்­டுக்­குள் இருந்­தா­லும், அதனை அவர்­க­ளா­லும் முற்­றி­லு­மாக அழித்­து­விட முடி­ய­வில்லை. புலி­க­ளுக்­குப் பின்­ன­ரான காலத்­தில் பண்­பாடு, மரபு, பாரம்­ப­ரி­யம் என்­கிற பெயர்­க­ளில் சாதி மீண்­டும் மெல்ல மெல்லத் தன்னை இனங்­காட்டி வரு­கின்­றது.

மீண்­டும் அறி­மு­க­மா­கி­யுள்ள தொகு­தி­வா­ரித் தேர்­தல் முறைமை, இந்த சாதி­யத்­துக்கு உரம் இட்­டுத் தண்­ணீர் பாய்ச்­சி­யி­ருக்­கி­றது. நடந்து முடிந்த உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் பல வேட்­பா­ளர்­கள் சாதிய அடிப்­ப­டை­யி­லேயே முன்­னணி அர­சி­யல் கட்­சி­க­ளா­லும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்­கள். அப்­படி மறுக்­கப்­பட்ட சில பகு­தி­க­ளில் சுயேச்­சை­யாக நிற்­ப­தற்­கும், வெல்­வ­தற்­கும், சாதி­யமே பெரும் பங்­காற்­றி­யது என்­ப­தை­யும் மறந்­து­விட முடி­யாது.

இன ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ரா­கப் போரா­டும் ஓர் இனம், தனக்­குள் இருக்­கும் சாதிய ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ரா­கப் போராட மறுப்­ப­தும், 21ஆம் நூற்­றாண்­டி­லும் சாதி­யத்­துக்­குத் தீனி­போட்டு வளர்ப்­ப­தும், ஏற்­றுக்கொள்ள முடி­யாத செயற்­பாடு. வளர்ந்த நாக­ரீக சமூ­கம் ஒன்று செய்­யும் செய­லல்ல. நீதி­யான, நியா­ய­மான, சமத்­து­வ­மான வாழ்வு அனை­வ­ருக்­கும் கிடைப்­ப­தற்­கா­ன­தா­கவே தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டம் முன்­ன­கர்த்­தப்­ப­ட­வேண்­டும். தமிழ்த் தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தின் ஆரம்ப காலங்­க­ளில் இந்த நேர்­மை­யான அர­சி­யல் சிந்­தனை அனே­க­மாக எல்லா இயக்­கங்­க­ளி­ட­மும், கட்­சி­க­ளி­ட­மும் வெளிப்­பட்­டன. ஆனால் இன்று, சாதி­யத்தை வெளிப்­ப­டை­யாக எதிர்த்­துச் செயற்­ப­டவோ குரல்­கொ­டுக்­கவோ முடி­யா­த­வை­க­ ளாக அவை வாக்கு வேட்டை அர­சி­ய­லுக்­குள் குறு­கிப்
போ­யுள்­ளன.

சமூக அக்­க­றை­யுள்ள அமைப்­பு­களே இந்­தச் சாதி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளில் அதிக அக்­க­றை­யும் வேக­மும் செலுத்­த­வேண்­டும். வரணி ஆல­யத்­தில் நடந்த சம்­ப­வம் சாதிய ரீதி­யான முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் எட்­டப்­பட்­ட­தாக இல்­லா­மல்­கூட இருக்­க­லாம். ஆனால், சாதி­யம் தமி­ழர்­கள் மத்­தி­யில் ஒரு புற்­று­நோ­யா­கப் பர­விக் கிடப்­பது பற்­றிய விவா­தத்தை அது கிளப்­பி­விட்­டி­ருப்­பது காலத் தேவை! இனி­யும் சாதி­யால் பிள­வுண்­டி­ரா­மல் நாம் அனை­வ­ரும் மனி­தர்­க­ளாக ஒன்­றி­ணை­வ­தற்­கான வழி­வ­கை­களை உரிய தரப்­பு­கள் ஆராய்ந்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close