2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?
எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலும் இந்த நாட்டின் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்காதுவிட்டால், நாட்டின் நிலை சீர்செய்ய முடியாதவாறு மிக மோசமான கட்டத்தை எட்டிவிடும்.
2020ஆம் ஆண்டு அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இவற்றின் முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகின்றன. அது மட்டுமல்லாது அரசியல்வாதிகளின் இருப்பையும் தீர்மானிக்கப் போகின்றன.
மகிந்த தரப்பில் அரச தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பதில் நீண்ட தாமதம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் கோத்தபாய போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவரும் அதைப் பகிரங்கமாக உறுதிப்படுத்தியிருந்தபோதும், மகிந்தவை ஆதரிக்கின்ற சிலரிடமிருந்து அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. வாசுதேவ நாணயக்கார போன்ற மகிந்தவுடன் மிக நெருங்கியவர்கள்கூட கோத்தபாயவை அரச தலைவர் வேட்பாளராக நிறுத்துவதற்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதேவேளை பெளத்ததேரர் ஒருவர் கோத்தபாய ஹிட்லர் போன்று ஆட்சிபுரிய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தமை நாட்டில் பெரும் எதிர்ப்புணர்வுகளைத் தோற்றுவித்துவிட்டது. தேரரின் இந்த வேண்டுகோள் ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்வதற்கு கோத்தபாயவே பொருத்தமானவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டது. இந்தத் தேரர் ஹிட்லரைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்தால் அவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஹிட்லர் போன்று கோத்தபாய செயற்படவேண்டும் என்ற கருத்தால் எழுந்த சர்ச்சை
அதுமட்டுமல்ல சர்வாதிகார ஆட்சிக்கு இந்த நாட்டில் என்ன தேவை எழுந்துள்ளது என்பதும் தெரியவில்லை. ஹிட்லர் செய்த கொடுமைகளைப் பல ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் உலகம் மறக்கவில்லை. ஆனால் பெளத்த தேரர் ஹிட்லரை மறக்காமல் இருப்பது விந்தைதான். அரச தலைவர் தேர்தலில் மகிந்த போட்டியிட முடியாது என்பதால் வேறு எவராவது ஒருவர்தான் போட்டியிட வேண்டியிருக்கும்.
ஐ.தே.கட்சிக்குள் ரணிலின் பிடி தளர்கிறதா? என்று எழும் சந்தேகம்
மறுபக்கத்தில் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் போட்டியிடுவதில் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இள மட்டத் தலைவர்களில் ஒருவர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருக்கும் என்பது அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரது கருத்தாகவுள்ளது. குறிப்பாக சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதைப் பலரும் விரும்புவதாகத் தெரிகின்றது. இவரது தந்தையார் மறைந்த அரச தலைவரான ரணசிங்க பிரேமதாஸ என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக்கட்சிமேல் மட்டத் தரப்பினரது கட்சி என்ற மாயையை நீக்கிக் கிராமப்புற மக்களிடத்திலும் அதைக் கொண்டு சென்றவர் முன்னாள் அரச தலைவர் பிரேமதாஸ என்பதை எவரும் மறந்துவிட முடியாது. ஏழை மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர் முனைப்புடன் செயற்பட்டார்.
மிகவும் பின் தங்கிய கிராமப்புறங்களில் மாதிரிக் கிராமங்களை அமைத்துக் கொடுத்தார். சஜித் பிரேமதாஸவும் தந்தையின் வழியில் செயற்படுவதைக் காண முடிகிறது. மகிந்தவின் கோட்டையான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி செல்வாக்குடன் இருப்பதற்கு சஜித் பிரேமதாஸவின் கடுமையான உழைப்பே காரணமாகும். இந்த நிலையில் அரச தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுகூலமாக இருக்குமென்பது பலரது கணிப்பாகும்.
மைத்திரிபால சிறிசேன தரப்பு மகிந்த தரப்புடன் ஒன்றித்துப் போய்விடுமா?
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், மகிந்தவின் கட்சியும் இணைந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுத்துவிட முடியாது. அரச தலைவரின் பக்கம் பலவீனமான நிலை காணப்படுவதால், அவருடன் உள்ளவர்கள் மகிந்தவின் பக்கம் தாவுவதற்கே விரும்புவார்கள். அரசியல்வாதிகள் எப்போதுமே தமது நலன்களைப் பேணுவதிலேயே குறியாக இருப்பார்கள். இதனால் காற்று வீசுகின்ற பக்கம் செல்வதையே அவர்கள் விரும்புவார்கள்.
இதேவேளை மகிந்தவின் காலடியில் இருந்து ஒரு காலத்தில் சேவகம் புரிந்த முன்னாள் பிரதியமைச்ச ரான மேர்வின் சில்வா தெரிவித்த சில கருத்துக்கள் சிலரின் சுயரூபத்தைத் தோலுரித்துத் காட்டிவிட்டன. தாம் அருகில் இருக்கும்போதே ஒருவரைச் சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாய உத்தரவு பிறப்பித்ததாக அவர் தெரிவித்தமை ராஜபக்சாக்களைத் தெளிவாக அடையாளம் காட்டிவிட்டது.
சிலவேளை கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதையும் அது கோடிகாட்டியுள்ளது. மேர்வினின் கருத்து ராஜபக்ச தரப்பினரது உண்மை முகத்தை எடுத்துக் காட்டிவிட்டது.
வடக்கு அரசியல்
வடக்கை எடுத்துக் கொண்டால், விக்னேஸ்வரனுக்குப் பாதகமான அம்சங்களே காணப்படுகின்றன. முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அவர் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை அவரைப் பொறுத்தவரையில் உருப்படியானதான இருக்கப்போவதில்லை.
டெனிஸ்வரனின் மீள் வருகை நிர்வாக ரீதியில் மட்டுமல்லாது, அரசியல் ரீதியிலும் அவரைப் பாதிக்கவே செய்யும். மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறானதொரு நிலை காணப்படுகின்றமை இவரைப் பொறுத்தவரையில் நல்லதாகத் தெரியவில்லை.
தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் குழப்பம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது இன ஒற்றுமையையும் வெகுவாகப் பாதித்து விட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வும் எட்ட முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்டது. 2020ஆம் ஆண்டு இடம்பெறப்போகும் தேர்தல்கள் நல்லதொரு முடிவை வழங்கும்போதுதான் நாட்டின் குழப்பங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இதில் தவறு ஏற்படுமானால், நாட்டின் பாதகமான தலைவிதியை எவராலும் மாற்றிவிட முடியாது.