அ.தி.மு.கவில் இணைந்தார் கஞ்சா கருப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த நடிகர் கஞ்சா கருப்பு, தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.

பிதாமகன் திரைப்படத்தில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

தன்னுடைய வெள்ளந்தியான கிராமத்துப் பேச்சின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அவர், முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார். 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், பிக்பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தன்னை அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பரப்புரைக் குழுவினைப் பலப்படுத்தும் வேலைகளில் அதிமுக ஈடுபட்டு வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே கஞ்சா கருப்பு அ.தி.மு.கவில் இணைந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

You might also like