side Add

ஜெயலலிதா- மறக்க முடியாத சினிமா காவியம்!!

‘அம்மா’ என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது.

அவருடைய பாட்டியின் பெயரான ‘கோமலவல்லி’ என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது.

அவருடைய ஒரு வயதில் அவருக்கு ஜெயலலிதா என்ற பெயரும் சூட்டப்பட்டது.

மைசூரில் ஜெயலலிதா குடும்பத்தினர் இரண்டு வீடுகளில் தங்கி இருந்தனர். ஒரு வீட்டின் பெயர் ‘ஜெயவிலாஸ்’ மற்றொரு வீட்டின் பெயர் ‘லலிதா விலாஸ்’. இதனை சேர்த்துதான் ஜெயலலிதா என்று பெயர் சூட்டினர்.

ஜெயலலிதா சர்ச் பார்க் என்று அழைக்கப்படும் புனித வளனார் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இடம்பிடித்தார்.

ஜெயலலிதா சரளமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசுவார்.

நான்கு வயதில் ஜெயலலிதா கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்.

ஜெயலலிதா தன்னுடைய சிறு வயதிலேயே எஸ்.ஜே. சரஸா என்ற சிறந்த ஆசிரியரிடம் பரதம் பயில தொடங்கினார்.

மே மாதம் 1960ஆம் ஆண்டு, மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் அவர் நடன அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்த அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதாவின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி, ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கூறினார். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நடனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. கிளாசிக்கல் மியூசிக், மேற்கத்திய இசை தெரியும். பியானோ வாசிக்கவும் பயின்றிருக்கிறார்.

தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை. ஆம், ஒரு முறை சந்தியா தன்னுடன் ஜெயலலிதாவை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது.

பதின் பருவத்தில் ஜெயலலிதா கிரிக்கெட் வீரர் பட்டோடியின் தீவிரமான ரசிகர்.

ஜெயலலிதா தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான ‘சின்னட கொம்பே’ திரைப்படத்தில் அறிமுகமானார்.

படிப்பு எக்காராணத்தினாலும் கெடக்கூடாது. படப்பிடிப்பு பள்ளி விடுமுறை காலமான இரண்டு மாதத்தில் முடிய வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஜெயலலிதாவின் அம்மா சந்தியா படப்பிடிப்பு குழுவுக்கு விதித்தார்.

ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும், கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என பல சமயங்களில் பல கனவுகள் இருந்திருக்கின்றன.

ஜெயலலிதா பிரெஞ்சுப் பெண்ணாக வேடமேற்று நடித்த ஓர் ஆங்கில நாடகத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் சோ.

கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் திரைப்படங்கள், சின்னட கொம்பெ (1964), மவன மகளு (1965), நன்ன கர்டவ்யா (1965), படுகுவா டாரி (1966).

ஜெயலலிதா, 1965 – 1980 இடையேயான காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.

இந்த காலக்கட்டத்தில்தான் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடின.

தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1972ஆம் ஆண்டு பெற்றார் ஜெயலலிதா.

அரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை ‘அம்மா’ என்று அனைவரும் அழைத்தாலும், இறுதிவரை அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை ‘அம்மு’ என்றே அழைத்தனர்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

1984-ஆம் ஆண்டு மே மாதம் கொள்கைபரப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆனால், இந்த ராஜினாமாவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற குழுவின் துணை தலைவராக ஜெயலலிதா இருந்தார். இதிலிருந்தும் ஜெயலலிதாவை நீக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.

மீண்டும் செப்டம்பர் மாதம் 1985ம் ஆண்டு கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

1989ம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல் எதிர்கட்சி தலைவர் ஆனார்.

1991 நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெயலலிதா.

1991 -1996 ஆட்சி காலத்தின் போது ஜெயலலிதா ஈட்டிய சொத்துகளுக்காகதான் பின் சிறை தண்டனை அனுபவித்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில்தான் இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதாவின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறது. துரதிருஷ்டமாக, இது நல்ல விடயத்துக்காக அல்ல. ஆம், 1995-ஆம் ஆண்டு தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு மிக பிரம்மாண்டமாக 1.5 லட்சம் பேரை அழைத்து திருமணம் நடத்தினார். இதுதான் கின்னஸில் இடம் பிடித்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த பிரம்மாண்ட திருமணம் குறித்து எழுதி இருந்தன.

ஊழல் வழக்கில் டிசெம்பர் 2, 1996- ஆம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டு 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அந்த சமயத்தில் முறைகேடாக சொத்து சேர்த்தது உட்பட ஆறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டது.

வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெப்ரவரி 2, 2000-ம் ஆண்டு தீர்பளித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

மீண்டும் 2001 தேர்தலில் வெற்றி பெற்றது அதிமுக. முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. ஆனால், அவர் பதவியேற்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம் சில வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தப்பின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா

2006 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்ற ஜெயலலிதா, மீண்டும் 2011 தேர்தலில் வெற்றி பெற்றார்.

முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 2014 ஆ-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூபா 00 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.

ஆர்.கே நகர் தொகுதியில் 2015-ம் ஆண்டு போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

2016- ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அதிமுகவே மீண்டும் வென்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

32 ஆண்டுகளுக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனவர் என்ற பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.

You might also like