side Add

தமிழர்களும் புலிகளும்!!

தமிழ் மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற சிங்கள மக்களின் கண்ணோட்டம் மாறவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் கொழும்பு அமைச்சர் ஒருவர்.

“தெற்கில் கிளர்ச்சி செய்தவர்கள் மீதான பார்வை மாற்றமடைந்ததைப்போல, வடக்கில் போரில் ஈடுபட்டவர்கள் மீதான பார்வையிலும் மாற்றம் அவசியம். வடக்கு மக்களை இனியும் புலிகளாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார் அமைச்சர் வஜிர அபேவர்த்தன.

அமைச்சராகப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சிங்களவர்கள் மத்தியில் சித்தரித்து வைத்திருக்கிறது கொழும்பு அரச இயந்திரம். அதனால் தமிழர்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் என்று எண்ணும் சிங்கள மக்கள் அனேகம் பேர் உள்ளனர்.

இதனைத்தான் தமிழர்களைப் புலிகள் என்று எண்ணக்கூடாது என்கிற வார்தைகளின் ஊடாக அமைச்சர் சொல்ல முயற்சிக்கின்றார். அதற்குக் காரணமும் இருக்கிறது.

இன்று தமிழர்களின் தயவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் அமைச்சர் வஜிரவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், தமிழர்கள் எல்லோரையும் புலிகளாகப் பார்த்தால் கொழும்பில் ஆட்சியிலிருப்பது புலிகளின், பயங்கரவாதிகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசு என்றாகிவிடும்.
அப்படிப்பட்ட ஒரு பெயரை சகித்துக்கொள்ள முடியாது என்பதால், தமிழர்களையும் புலிகளையும் பிரித்து உணரும் சக்தியை சிங்கள மக்கள் பெற வேண்டும் என்று அமைச்சர் விரும்புகின்றார்.

ஆனால், உண்மையில் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதையல்ல. தமிழ் மக்களின் கோரிக்கைகளின் அபிலாசைகளின் வேணவாக்களின் அகிம்சை வடிவத்துக்குச் சிங்களவர்கள், சிங்களத் தலைவர்கள் மதிப்பளிக்காமல் விட்டதன் விளைவாக முகிழ்த்ததுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

தமிழ் மக்களின்றி புலிகள் இல்லை. புலிகள் இன்றி இன்றைய தமிழ் மக்களின் அடையாளமும் இல்லை. அந்த வன்முறை வடிவம் மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதை யாரும் மறுப்பதற்குமில்லை. ஆனால், தவிர்க்க முடியாமல் அதனை நீக்கிவிட்டு தமிழர்களை அடையாளப்படுத்தவும் முடியாது.

அதுபோன்ற வரலாறு மீண்டும் திரும்பும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதும் அனைவரது விருப்பமாக இருந்தாலும் கடந்த காலத்தை இல்லாதொழித்துவிட முடியாது. அதனால் புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்று பிரித்துவிட முடியாது.

சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தமும் உண்மையும் அதுதான். புலிகளையும் தமிழ் மக்களையும் தனித் தனியே பிரித்தறிவது அல்ல சிங்கள மக்களின் தேவை. தமிழ் மக்களின் நிறைவேற்றப்படாத தேவைகளின் எதிர்ப்பு வடிவம் விடுதலைப் புலிகள் என்பதையே சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தப் புரிதல் ஏற்படும்போதுதான் நாட்டின் இனப் பிரச்சினைக்கு நீதியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை எட்ட முடியும்.

தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்தாள்வதன் மூலம் அரசியல் செய்ய முற்படுவதைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெற்கு தொடர்ந்து செய்துகொண்டே வந்திருக்கிறது. அமைச்சர் வஜிர சிங்கள மக்களுக்குக் கூறும் அறிவுரையும் அதன் ஒரு வடிவம்தான்.
தெற்கில் கிளர்ச்சி செய்த ஜே.வி.பியையும் புலிகளையும் ஒப்பிட முடியாது. அவை இரண்டுமே வெவ்வேறு பரிமாணங்க ளையும் வடிவங்களையும் கொண்ட போராட்டங்கள்.

சிங்கள மக்களின் மனங்களின் மாற்றம் ஒன்று ஏற்படவேண்டியது அவசியம். அந்த மாற்றம் புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்கிற புரிதல் மாற்றமாக அல்லாமல் தமிழர்களையும் சக மனிதர்களாக சம உரிமை உள்ளவர்களாக மதிக்க வேண்டும் என்கிற மாற்றமாக அமையவேண்டும். அதுவே பயன் தர வல்லதாக அமையும்.

You might also like