இலங்கையில் வாழாத இலங்கையர்களுடன் ஆளுநர் குரே லண்டனில் கலந்துரையாடல்

இலங்கையில் வாழாத இலங்கையர் (என்.ஆர்.எஸ்.எல்) என்ற அமைப்பின் பிரதிநிதிகளை வடக்கு மாகாண ஆளுநர் லண்டனில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

லண்டனில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுவரும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினமிரவு குறித்த அமைப்பினரை லண்டனில் அமைந்துள்ள இம்பேறியல் சைனா விடுதியில்

சந்தித்துக்  கலந்துரையாடியுள்ளார். சந்திப்பில் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொண்டிருந்தனர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு மலர்ந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய அவர்கள் ஆளுநர் தமிழ் மொழியில் பேசுவது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீது கொண்டுள்ள அக்கறையையும் தாம் பாராட்டுவதாகத் தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வுக்கு கொழும்பு அரசு எடுத்துவரும் முயற்சிகள் என்ன என்பது குறித்தும் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் அமைப்பினர் கேட்டறிந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஆளுநர் குரே,

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, மறுபக்கத்தில் அந்த மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாயமாகவுள்ளது என்று தெரிவித்தார்.

எனது ஐரோப்பிய பயணம் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாதது. வடக்கு மாகாணத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முதலீடுகளைச் செய்து அங்கு பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

வாரம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் என்னைச் சந்தித்து வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகள் பலவற்றை என்னால் முடிந்த அளவு அதிகார வரம்புக்கு உட்பட்டுச் செயற்படுத்தி வந்திருக்கின்றேன்.

ஆனாலும் அங்கு பெருமளவில் வருவோர் இளைஞர்களாக இருக்கின்றனர். அவர்கள், தமது வாழ்க்கைக்கு ஒரு வேலையில்லாதது பிரச்சினையாகவுள்ளது  என்று கூறுகின்றனர். அதற்காகப் பல தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் அப்போதுதான் அவர்களின் பிரச்சினைகளைத்  தீர்க்க முடியும் என்று நான் நினைக்கின்றேன். அதுவே எனது வருகையின் நோக்கம் என்று கூறியுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

You might also like