ஊற்றுப்புலம் குள சீரமைப்பு நிறுத்தம் திணைக்களங்கள் முரண் கருத்துகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஊற்றுப்புலம் குளம் சீரமைக்கப்படும் நிலையில், அந்தப் பகுதி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என்றுகூறி  வனவளத் திணைக்களம் பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த விடயத்தில் அரச திணைக்களங்கள் முரண்பாடான கதைகளைக் கூறிக்கொண்டிருக்கின்றன. இதனால்தாம் பாதிக்கப்படுகிறோம் என்று  பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் 250 ஏக்கர் வயல் நிலம் செய்கை பண்ணப்பட்ட நிலையில் போர்க் காலத்தில் சுமார் 100 ஏக்கர் நிலம் காடு சூழ்ந்துவிட்டது. பிரதேசத்துக்குச் செல்வதற்குத் தற்போது வனவளத் திணைக்களம் தடுத்து வருகிறது. பல விவசாயிகள் நிலத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமக்கான நீரேந்து குளத்தைச் சீரமைத்துத் தருமாறு கடந்த 3 ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பெயரில் இந்த ஆண்டு 23 மில்லியன் ரூபா பணம் விடுவிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குளத்தின் அலைகரைப் பகுதிகளும் தமது ஆளுகைப் பிரதேசம் என்று சொந்தம் கொண்டாடி சீரமைப்புப் பணிகளையே தடுத்து விட்டனர்.

அதனால் இந்த ஆண்டு நிறைவுக்குள் பணியை நிறைவு செய்ய முடியுமா என்ற அச்சம் எழுகின்றது. நிறைவு செய்யாதுவிடின் பணம் திரும்பினால் மீண்டும் பணம் கிடைக்குமா என்ற அச்சமும் உள்ளது. குறித்த விடயத்துக்குத் தீர்வு தருமாறு மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். தீர்வு கிட்டவில்லை” என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குத் தீர்வை எட்டாமலா ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியை ஆரம்பித்தீர்கள் என்று மாவட்ட கமநல உதவி ஆணையாளர் ஆயகுலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
“குறித்த குளத்தைச் சீரமைப்பதற்கான திட்டம், அதற்கான செலவு மதிப்பீடு, கள ஆய்வுகள் என்பன 2017ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றுதொடக்கம் ஒப்பந்தம் வழங்குவதற்கு முன்பே 3 தடவைகள் வனவளத் திணைக்களத்துக்கு எழுத்தில் கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தப் பகுதியில் உங்கள் பிரதேசம் உள்ளதா? அவ்வாறாயின் அதன் எல்லையை அடையாளப்படுத்த முடியுமா? என்று கோரியிருந்தோம். அந்த 3 கடிதங்களுக்கும் பதில் வழங்கப்படவில்லை. பணியை ஆரம்பித்த பின்னர் ஓர் ஆண்டுகடந்த நிலையில் அந்தப் பகுதி தமது பிரதேசம் என்பதனாலேயே திட்டம் தடைப்பட்டுள்ளது” என்றார்.

இவ்வாறு விவசாயிகளும் கமநல உதவி ஆணையாளரும் குற்றஞ்சாட்டுவது தொடர்பில் வனவளத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஜெயச்சந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
கடந்த காலத்தில் கடிதம் அனுப்பியது உண்மை. இருப்பினும் அதற்குப் பதிலளித்தோம். குளத்தின் அணைக்கட்டுக்காக மண் எடுக்கப்படும் பிரதேசத்தில் பல மரங்கள் உள்ளன. அவை அழிவடைந்து விடும் என்பதே பிரச்சினை. அதேநேரம் ஒரு குளம் இருந்தால் அது அந்தத் திணைக்களத்துக்கு உரித்தானது என்று அரசிதழில் பிரசுரித்திருந்தால் குளத்தின் அணைக்கட்டு எத்தனை அடி உயரமோ அதன் 15 மடங்கு நிலம் அந்த திணைக்களத்திற்கே  உரியது” என்றார்.

இவ்வாறு குளத்தின் சீரமைப்புப் பணிகளில் சர்ச்சை ஏற்படுவமது தொடர்பில் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகத்திடம் தொடர்பு கொண்டு இரு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுத் தொடர்பில் கேட்டபோது,
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் 444 குளங்கள் உள்ளன. இவற்றுக்கோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தக் குளத்துக்கும்  அரசிதழ் அறிவித்தல் கிடையாது. ஒவ்வொரு குளத்துக்கும் அனுமதிக்கப்பட அளவு நிலத்தில் இருந்து மண்ணைப் பெற்றுக் குளத்தைச் சீரமைக்கும் உரிமை உண்டு. அதனால் அந்தப் பணி எந்தக் காரணத்துக்காகவும் தடைப்பட முடியாது. இது தொடர்பில் உடனடியாக வனவளத் திணைக்களத்துக்குத்  தெரியப்படுத்தப்படும்” என்றார்.

You might also like