எமது பெயரால் குற்றஞ்சாட்ட எவருக்கும் உரிமையில்லை!

சிறையில் வாடும் கைதிகளைத் தவிர வெளியில் கைதிகளுக்காக அனைவரும் குரல்கொடுக்கலாம். ஆனால் அரசியல் கைதிகள் சார்பாக என்றுகூறி எவரையும் குறைகூறும் அதிகாரத்தை நாம் யார்வசமும் ஒப்படைக்கவில்லை. எனவே அதனைக் கருதாது எமது விடுதலைக்குத் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு மகசின் சிறைக் கைதிகள் கோரியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மகசின் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 42 பேரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இ. சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் சென்று சந்தித்திருந்தனர். சந்திப்புத் தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்ததாவது:.
அனைத்து வகைத் தமிழ் அரசியல் கைதிகளான 107 பேரையும் ஒரே வகையில் மன்னிப்பின் கீழ் குறுகிய கால மறுவாழ்வு மூலம் விடுவிக்க வேண்டும் என்பதே அந்தக் கைதிகளின் விருப்பம் என்று கைதிகள் கூறுகின்றனர். அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு முயற்சி எடுக்க வேண்டும். அதேநேரம் அவ்வாறு மேற்கொள்ளும் முயற்சிகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் வெள்ளிக் கிழமை எமக்கும் அறியத் தரவும்.
வெளியில் இருந்து பலரும் கூறும் கருத்துகள் அவர்களது நிலைப்பாடு. எமக்கு வேண்டிய எமது விடுதலையே என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர் – என்றார் நிர்மலநாதன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளைப் பார்க்கச் சென்றபோது, “நாங்கள் போராட்டம் நடத்தினால் மாத்திரம்தான் எங்களைப் பார்க்க வருவீர்களா என்று அரசியல் கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

You might also like