side Add

கடந்த கால முறைகேடுகளைச் சீர்செய்யும் வரை புதிய இடமாற்றங்களுக்கு ஆதரவில்லை

ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஸ்ராலின் தெரிவிப்பு

வடக்கு மாகாண ஆசரிய இடமாற்றங்களின்போது அரசியல் தலையீடுகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த காலங்களில் இடமாற்றத்தில் நடந்த முறைகேடுகள் சீர்செய்யப்படும் வரை இடமாற்றச் சபைகளில் கலந்துகொண்டு புதிய இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்குவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனையும் மீறி வலய மற்றும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடமாற்றங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் ஆதாரங்களுடன் பல தரப்பினரிடமும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆயினும் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் பக்கச்சார்ப்பான செயற்பாடுகளால் நியாயத்தன்மை பின்பற்றப்படவில்லை. சட்டபூர்வமான இடமாற்றச் சபைகள் ஊடாக தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டன. கடந்த வருடம் இடம்பெற்ற வருடாந்த இடமாற்றங்களிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இடமாற்றத்துக்கு தகுதிபெற்றிருந்த அழகியல் பாட ஆசிரியர்கள் சிலருக்கு இன்னமும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவை தொடர்பாக வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் முறைகேடுகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. இடமாற்றச் சபைகள் கூடுகின்றபோது இடமாற்றச்சபையின் தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் பேணப்படுகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றசபைத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தியதாகக் கூறிவருகிறார். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவைதொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியிருந்தபோதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதமை கவலைக்குரியது யாழ்ப்பாண வலயத்தில் இடமாற்ற சபைத் தீர்மானத்துக்கமைய நடைமுறைப்படுத்தியிருந்த சில இடமாற்றங்களிலும் இடமாற்றச்சபையின் தீர்மானத்தை மீறி வடக்கு மாகாண கல்வியமைச்சு தன்னிச்சையான முறையில் இடமாற்றங்களைச் செய்துள்ளது.

கடந்த கால முறைகேடுகளை நிவர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாண கல்வியமைச்சுக்கு ஒருநாள் போதுமானது. முறைகேடுகளை நீக்க கல்வியமைச்சும் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் உடனடியாக முன்வரவேண்டும். எமது இத்தகைய நிலைப்பாட்டை வெளிமாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்குக் காரணம் காட்டி வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் வருடாந்த இடமாற்றத்தை இழுத்தடிக்க அனுமதிக்கமாட்டோம். முறைகேடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு உரிய காலத்தில் இடமாற்றச்சபைகள் கூட்டப்படவேண்டும். தவறும் பட்சத்தில் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்துப் பெரும்  தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதைத் தெரிவிக்கின்றோம். எமது இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து இடமாற்றங்கள் தொடர்பாக நீதியாகச் செயற்படுவதற்கு வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சு, கல்வித் திணைக்களமும் தொடர்ந்தும் பின்நிற்குமானால் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும் என்று எச்சரிக்கின்றோம் -என்றார்.

You might also like