மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் மனைவி குல்ஸூம் லண்டன் மருத்துவமனையில் நேற்றுக் காலமானார். அவருக்கு வயது 68. கணவர் பதவி இழந்ததால் இடைத் தேர்தலில் போட்டியிட்ட குல்ஸூம், எம்.பியாக பதவி ஏற்கவில்லை.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், நவாஸ் ஷெரிபை பிரதமர் பதவியிலிருந்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இந்த வழக்கில் நவாஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நவாஸ் பதவி இழந்ததால் அவரது தொகுதியான லாகூரில் மனைவி குல்ஸூம் போட்டியிட்டார். பிரச்சாரம் நடந்தபோதே, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குல்ஸும் நவாஸுக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக லண்டன் சென்றார். எனினும் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்கவில்லை. உடல் நலம் சரியில்லாததால் எம்.பியாக பதவி ஏற்காமல் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

லண்டனில் அவருக்கு, அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஜூலை மாதம், குல்ஸூம் திடீர் மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நேற்று அவர் உயிரிழந்தார்.

கணவர் பதவி இழந்ததால் காலியான தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குல்ஸூம் எம்.பி.யாக பதவி ஏற்காமலேயே உயிரிழந்துள்ளார். எனினும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்தல் நடந்து தற்போது இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த குல்ஸூம், லாகூர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் நவாஸை திருமணம் செய்தார். நவாஸ் – குல்ஸூம் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, நவாஸ் பிணை மனு கோரியுள்ளார்.

அந்த பிணை மனுவை ஏற்றகொண்ட நீதிமன்றம், அவருக்கு 12 மணிநேர பிணை கொடுத்து உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close