யாழ். பாரம்பரியத்தைப் பாதுகாக்க அமெரிக்கத் தூதரகம் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை அமெரிக்கத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கலைப்பொருள்களைப் பேணிப் பாதுகாக்கும் இரண்டு வருட திட்டமொன்றையே அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் கீழ் 23 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக மீளவும் பெறமுடியாத, சிதைவடையும் நிலையிலுள்ள, வரலாற்றுக்கு முற்பட்ட மட்பாண்டங்கள், பித்தளை மற்றும் செப்பு பொருள்கள், கோவிற் சிலைகள், நாணயங்கள், பவளக் கற்கள் மற்றும் செரமிக் உருவங்கள் போன்றன பேணிப் பாதுகாக்கப்படவுள்ளன. அவற்றில் பெரும்பாலான கலைப்பொருள்கள் வடக்கு மாகாணத்திலிருந்து மீட்கப்பட்டவை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல்துறை பட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். மூத்த பேராசிரியரும் திட்டப் பணிப்பாளருமான பேராசிரியர் பி.புஷ்பரட்ணம இந்தத் திட்டம் தொடர்பான சிறந்த யோசனையொன்றை

அமெரிக்கத் தூதரகத்துக்கும் கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்துக்கும் சமர்ப்பித்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் இந்தத் திட்டத்தை வழிநடத்துவதற்கு உதவுவார் என்று தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந் நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்து.

என்று அமெரிக்க பதில் தூதுவர் ஹில்டன் குறிப்பிட்டார். “கலாசார பாரம்பரியங்கள் மனிதநேயத்தின் வரலாற்று அனுபவங்களை நினைவுபடுத்துபவையாகக் காணப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். கலைப்பொருள்கள் பேணிப் பாதுகாக்கப்பட்ட பின்னர் பல்கலைக் கழகத்தின் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்படும்.

2001ஆம் ஆண்டு முதல் கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக இலங்கையில்

13 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்த விகாரைகளைப் பேணுதல், மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைச் சீரமைத்தல், அநுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையில் உள்ள பௌத்த, இந்து மற்றும் ஏனைய கலைப் பொருள்களைப் பேணிப் பாதுகாத்தல், ஆதிவாசிகள், தமிழ் மற்றும் பௌத்த சமூகத்தில் உள்ள அருமையான சடங்குரீதியான இசை மற்றும் நடனங்களைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்கள் உள்ளடங்குகின்றன.

கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியமானது உலகம் முழுவதிலுமுள்ள 100 நாடுகளில் கலாசார பகுதிகள், கலாசாரப் பொருள்கள், மற்றும் பாரம்பரிய கலாசார வெளிப்படுத்தல்கள் என்பவற்றைப் பாதுகாக்க உதவிவருகிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

You might also like