அடுத்தடுத்து இரட்டை வேடங்களில் தனுஷ்!!

தொடர்ந்து இரண்டு படங்களில் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்துவருகிறார் தனுஷ்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கொடி’ படம் தான் தனுஷ் முதன் முதலாக இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.

2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் தனுஷ். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். ஆனால், இந்தப் படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், 3 வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்கி வருகிறார்.

இதில், அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, மகன் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அத்துடன், வெற்றிமாறன் இயக்கிவரும் ‘அசுரன்’ படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ் என செய்தி வெளியாகியுள்ளது. இதிலும் அப்பா – மகனாக நடிக்கிறார் தனுஷ். 45 வயதான அப்பா தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

You might also like