side Add

ஒரே நாளில்- 1,700 பேர் கைது!!

அரசை எதிர்த்து பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கலவரம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது.
இதற்கு, அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, பிரான்ஸின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில், கலந்துகொண்ட சிலர் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டதால், பொதுமக்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது.

அந்தக் கலவரத்தில், 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேச அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரூன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், யார் போராட்டத்துக்குக் காரணம், யார் கலவரத்தில் ஈடுபட்டது போன்ற எந்தத் தகவலும் தெரியாமல் அதிகாரிகள் திணறினர்.

மக்களின் போராட்டத்துக்கு முக்கிய காரணமாக எரிபொருள் வரியைத் திரும்ப பெற்றுக்கொள்வதாக பிரான்ஸ் அரசு அறிவித்தும் அரசின் மீது உள்ள மற்ற அதிருப்திகளால் தொடர்ந்து அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பிரான்ஸ் நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நகரில் போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்தும் அங்கு பொது மக்களின் போராட்டம் ஓயவில்லை. முன்னதாக போராட்டம் நடத்திய அதே அமைப்பினர் அதே பகுதியில் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் மொத்தமாக 1,36,000 பேர் கலந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. கணக்கில் அடங்காத வாகனங்கள், பொது சொத்துகள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1,723 பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like