கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக- மக்கள் கவனவீர்ப்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் கரடி போக்குச் சந்திக்கருகில் வழங்கப்பட்ட வியாபார நிலையம் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, மக்கள் சிலர் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“கரைச்சி பிரதேச சபைக்குரிய காணியை, தவிசாளர் தன்னிச்சையாக வசதிப் படைத்தவர்களுக்கு வியாபார நிலையம் அமைப்பதற்கு வழங்கியுள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதியில் கரடி போக்குச் சந்தியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க காணிகளையே இவ்வாறு வழங்கியுள்ள்ளார்“ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

“தவிசாளரே! எமது கிராமத்தில் எமக்கு முன்னுரிமையா? பணமுள்ளவர்களுக்கு முன்னுரிமையா?, கரைச்சி பிரதேச சபையே! நிறுத்து நிறுத்து அநீதியான செயற்பாட்டை நிறுத்து,
தவிசாளரே! உங்கள் ஆட்களுக்கு கொடுப்பதற்கு பொதுச் சொத்து உன் சொத்தல்ல, தவிசாளரே உங்களின் நலனுக்கு மக்களின் சொத்தா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த காணியை கிராம மக்களின் வாழ்வாதார தேவைகள் அல்லது பொது தேவைகளுக்கு வழங்குவதாக தெரிவித்த வந்த நிலையில், திடீரென ஐந்து தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டவர்கள் கிளிநொச்சி நகரில் பிறிதொரு இடத்தில் தற்போது வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

வியாபார நிலையங்களை வழங்குவதாயின் சபையின் அனுமதி, பெறப்பட்டு, பத்திரிகைகளில் கேள்விக் கோரல் விடப்பட்டு வழங்கியிருக்க வேண்டும் ஆனால் அ எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like