சொர்க்கத்துக்குச் செல்வதற்காக -ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் எடுத்த முடிவு- மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியீடு!!

இந்திய டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட கொண்ட விவகாரத்தில் முக்கிய தகவல்கள் பொலிஸாருக்கும் தெரியவந்துள்ளது.

டில்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த முதலாம் திகதி இரவு கூட்டாக உயிரை மாய்த்துக் கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும், ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டயரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் உயிரை மாய்த்துக் கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் டில்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. ஆனால், அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு கோழைகள் அல்ல. இதற்குப் பின்னால் யாரேனும் இருக்க வாய்ப்பிருப்பதாக பொலிஸாரிடம் அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் மந்திரவாதி காடா பாபா தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவரைப் பொலிஸார்  வலை வீசி தேடி வருகின்றனர்.

வீட்டிற்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருப்பது கண்டி பிடிக்கப்பட்டது. அந்த அறையில்தான் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.. அதாவது, தங்கள் ஆன்மா அந்த குழாய் வழியாகவே வெளியேறும் என அவர்கள் தங்கள் டயரியில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டின் அருகிலிருந்து சிசிடிவி கமராப் பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும் படி யாரும் அன்று அவர்களின் வீட்டிற்கு வரவில்லை. மாறாக இரவு 10 மணியளவில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வருவதும், சிறுவர்கள் கயிறுகளை எடுத்து வருவதும் பதிவாகியுள்ளது. எனவே, அவர்கள் சொர்க்கத்தை அடையவேண்டும் என விரும்பியே உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த மூடநம்பிக்கையை அவர்களின் மனதில் ஏற்றியது யார்? காடா பாபாவுக்கு இதில் என்ன தொடர்பு? தற்கொலை செய்த போது ஒரு நபர் இருந்தாரா? என பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

You might also like