தாமரையில் தான்- தமிழீழம் மலரும்!!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு’ அன்றைய தமிழன் சிந்தனையில் பட்டறிவால் தோன்றிய வார்த்தை இது. இன்றைய தமிழனோ அதை உணராது தடுமாறி நிற்கிறான். என்னே! என்னே! இதைத் தமிழினத்தின் விதி என்பதா? அல்லது மடமை என்பதா?
அட தமிழா உனக்கு ஒன்று சொல்வேன் அதைச் சற்றுச் செவிமடுத்து நில்லடா. எம்மைப் பார்த்து ‘அட’ என்று சொல்பவன் யாரடா? என்று சிலர் சிந்தனையில் கேள்வி எழுவதையும் எம்மால் உணர முடிகின்றது. இதைச் சொல்பவன் எண்பது வயதை எட்டிய கிழவன் என்று சொல்லும்போது கேள்வி எழுப்பியவர் சிந்தனையில் ஏற்பட்ட சீற்றம் சற்றுத் தணியும் எனவும் எம்மால் உணரமுடிகின்றது.
தேங்காயைச் சுற்றி மட்டை இருக்கின்றது. அதை நாம் பொச்சு என்று சொல்லுகிறோம். அந்த மட்டையை நீரில் ஊறவைத்து அடித்துத் துவைத்துத் தும்பை எடுக்கிறோம். அந்தத் தும்பைக் கொண்டு துடைப்பம், மிதித் தட்டு போன்ற பாவனைப் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்துகிறோம். அந்தத் தும்பை முறுக்கி எடுத்துக் கயிறு என்ற பெயரில் வேலி அடைக்கிறோம். எமது வசதிக்காகக் கால் நடைகளைக் கட்டிவைத்து ஆள்கிறோம். அதே தும்பைத் திரட்டி எடுத்துப் பருமனாய்க் கயிறாகத் திரித்து அதற்கு வடம் என்று பெயரிட்டு ஆண்டவன் திருவுலா வரும் மணிநெடும்தேர் அசைந்தாடிவர இழுத்துச் செல்கிறோமே! இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
‘’சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்’’ என்று சொன்ன நம் முன்னோர் சிறு தும்பை க்கொண்டு எதை எதை எல்லாம் செய்தார்கள். பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைச் சற்றேனும் நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா?
ஆதிகாலத் தமிழனும்
அவன் அடையாளமும்
இன்னும் கொஞ்சம் சொல்கிறேன் கேள்மின். இலங்கை மாதாவின் தலை, அது வடபுலம் யாழ்ப்பாணமாகும். அது உலகறிந்த பூமி. யாழ்.மண்ணில் நாலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அரச எதிர்ப்புக்கு மத்தியில் நடந்தேறியது. அப்போது செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஒருவர் தமிழ்மொழி மீதுகொண்ட மோகத்தால் அந்த மொழியைக் கற்றுத் தேறி, தமிழ் அறிஞன் ஆகித் தன்பெயரைச் ‘செம்பியன்’ என்று மாற்றித் தமிழ்ப் பண்பாட்டுடையில் நெற்றியில் சந்தனப் பொட்டிட்டுக் கம்பீரமாக மேடையில் நின்று ‘’பணம் இருந்தால் வாங்காளம் போகலாம்; தமிழ் தெரிந்தால் யாழ்ப்பாணம் போகலாம்’’ என்று மழலை மொழியில் மொழிந்து நின்றார். அப்படியான இந்த மண் மூளை வளம் நிரம்பியது. அந்த வளத்தைக் கருத்தில்கொண்டுதான் சிறுபான்மைக் குழுமமான தமிழ் இனத்தைக் கண்டு பெரும்பான்மை இனமாக சிங்களத் தலைமைகள் பயப்படுகிறார்கள். அவர்கள் பயப்படுவதற்கு ஒரு நியாயம் இருக்கிறது.
சிங்கள மக்களின் ஆதிநாள் இராசதானி அநுராதபுரம். சிங்கள மக்களின் அரசிருக்கை காலத்துக்குக்காலம் பொலநறுவை, தம்பதெனியா, குருநாகல், றைகம்கோட்டை என்று மாறி இருக்கிறது. இதற்குக் காரணம் தென்னிந்தியப் படையெடுப்பாகும். முடியுடை மூவேந்தர்களுள் சோழர்களும் பாண்டியர்களும் அடிக்கடி படையெடுத்துப் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுவந்தனர் என்பது வரலாறு. இலங்கை முழுவதும் தமிழர்கள் செறிந்து வாழ்வதற்கும் அவர்களது வழிபாட்டுச் சின்னங்களாகக் கோவில்கள் கட்டப்பட்டன என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அக்கால கட்டடங்களில் எம்மவர் வெறுப்பனவாய சிறுமைகளைச் செய்திருக்க வாய்ப்புண்டு. அந்தச் செய்கைகளே இன்று எம்மினத்தின் அவல நிலைக்கும் துன்ப துயரங்களுக்கும் காரணமான சாபக்கேடாக அமைந்தன என்பதை நாம் எமது உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை
பன்னாடுகள் ஏன் தோற்கடித்தன?
சிங்களத் தலைமைகளால் தமிழ்த் தலைமைகள் ஏமாற்றப்படுவதை உன்னிப்பாகக் கவனித்துவந்த இளைஞர் சமூகம் கையிலே ஆயுதத்தை எடுத்தார்கள். அவர்களது மண்டை வளம் அவர்களது செய்கைகளிலே ஒளிவிட்டதைக் கண்ட உலகத்துக்கு அவர்களது செயல்களின் தாக்கம் எதிர்காலத்தில் உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்திவிட்டது. அதனால் அவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து இலங்கை அரசோடு இணைந்து எங்களது ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்தார்கள்.
அந்த உலகம் எமது உரிமைக்குரலை ஏற்கிறது. மதிக்கிறது. மனிதப் பண்பாட்டையும் மனித உரிமைகளையும் நீதி நெறி முறைகளையும் நிலை நிறுத்த அது பாடுபடுகின்றது என்பதை யாராலும் மறுதலிக்கவும் முடியாது. எல்லா இனத்தவர்களும் எல்ல அரசுகளும் தத்தம் நாட்டு உயர்வுக்காகவும் நலனுக்காகவும் பாடுபடுகின்றன. அந்தச் செயல்களை வைத் துக்கொண்டு அவர்களைச் சுயநலவாதிகள் என்று நோக்கலாமா? முடியாது. அந்த நோக்கு. அந்தப் பார்வை தன் அளவில் நில்லாமல் பிறர் நலனிலும் செறிந்து பரவுமானால் அதைச் சுயநலம் என்று எப்படி அர்த்தப்படுத்த முடியும்?
இந்திய -– இலங்கை ஒப்பந்தமும்
அதில் ஊடாடும் இராஜதந்திரமும்
1987ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கை அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. தமிழர்களின் உரிமைப் போராட்டம் வலுவடைந்தபோது இந்தியத் தலையீடு ஏற்பட்டது. அப்போதைய தமிழர் தலைமையின் அரும்பெரும் முயற்சியால் இந்தியத் தலையீடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் உள்ள குறைபாடு களை அமிர்தலிங்கம், இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்திக்குச் சுட்டிக்காட்டியபோது, ராஜீவ் சொன்னார் ‘‘இப்போதைக்கு இதை ஏற்றுக்கொள்ளுங்கள் பின்னை அதை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று. அந்த உடன்பாட்டில் அமிர்தலிங்கமும் ஒப்பமிட்டார். அது ஒரு கனவான் உடனபடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்த உடன்பாட்டை அன்றைய துடிப்புள்ள இளைஞர் சமூகத்தினர் ஏற்க மறுத்தனர். அவர்களின் முதன்மை யானவர் பிரபாகரன். இந்திய அரசு சுயநலத்தோடு இந்த உடன்படிக்கையைச் செய்துள்ளது என்று மறுத்து நின்றார். அப்போது அமிர்தலிங்கம் அத்தகையவர்களைப் பார்த்து ஒன்று சொன்னார். நாம் பேச்சுவரைதான் வருவோம். அதன் பின்னை (பிறகு) நீங்களே ஆளுங்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெரிய இராஜதந்திரி அதனால் நாம் கவனமாகவும் நிதான மாகவும் நடக்கவேண்டும்’’ என்றார்.
கையில் எடுத்த ஆயுதத்தைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று எண்ணிய இளைஞர் சமூகத்தால் அமிர்தலிங்கத்தின் அறிவுரை வெறியதாகப்போய் விட்டது. பின்னாளில் சில சம்பவங்கள் நடந்தேறின. அப்போது ஜே.ஆர். சொன்னார். புலிகளமைப்பின் எதிர்ப்பால் நாம் சிரமப்பட்டிருந்த வேளையில் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் கை நீட்டினார். நாம் அவர்களின் கையை இறுகப்பற்றிக் கொண்டோம். இப்போது அவரைப் போகச் சொன்னோம். போய் விட்டார்கள் என்றார். சிங்களத் தலைமையின் இராஜதந்திரம் எப்படியிருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள்.
அமிர்தலிங்கத்துக்காக
களமிறங்கினார் ஜி.ஜி.
இலங்கை ஜனநாயக சோசலிய அரசியல் சட்டத்தை எதிர்த்து துண்டு அறிக்கை விட்டதற்காக அமிர்தலிங்கத்தைக் குறியாக வைத்து அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசு அவர்மீது வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கின்படி எதிராளி குற்றவாளியாகக் கருதப்பட்டால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறையும் சொத்துப் பறிமுதலும் அரசியல் உரிமை மறுப்பும் ஏற்படும். இந்த வழக்கு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் வாதாடத் தமிழ் சட்டத்தரணிகள் பலர் ஒன்று திரண்டனர். முதல் நாள் விசாரணை அன்று தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் கணபதிப்பிள்ளை காங்கேயர் பொன்னம்பலம் (ஜி.ஜி) வாதாடினார். இந்த வழக்குத் தொடுத்தமுறை தவறென்றும் இந்த நீதிமன்றால் விசாரிக்க முடியாதென்றும், 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி யும் வாதாடியபோது நீதிமன்ற வளாகமே அதிர்ந்தது. பெரும் பதற்றம் அடைந்தது.
டாக்டர் பெரேரா நீதியரசராய் இருந்த காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியில் சிறந்த சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். எதிர்க்கட்சி என்றால் எதற்கும் எதிரான கட்சியா? அப்படி அதற்குப் பொருள் கொள்ளலாமா? எதிர்க்கவேண்டிய இடத்தில் எதிர்த்தும் தட்டிக்கொடுக்கவேண்டிய இடத்தில் கட்டிக்கொடுத்தும் செயல்படுவதுதான் எதிர்க்கட்சியாகும். ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும் என்பதால் தமிழர் தலைமைத்துவம் மெத்தனப்போக்கைக் கையாளுகின்றது என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும்.
மகிந்தவின் ஆட்சியும்
மைத்திரியின் ஆட்சியும்
மகிந்தவின் ஆட்சி இனவாதத் துரும்பைக் கையில் எடுத்த ஆட்சி. நான் என்ற ஆணவத் தாண்டவம் புரிந்த ஆட்சி. அதையாரும் கெடுக்கவில்லை. அது தானாகவே கெட்டழிந்தது. மைத்திரியின் ஆட்சி கேட்பார் புத்திகேட்டுக் கொண்டுவிட்ட ஆட்சி. அதன் சூழ்ச்சித் திட்டத்தைத் தமிழர் தலைமைத்துவம் அம்பலப்படுத்தியது. தமிழர் தலைமை தேசிய ரீதியில் செயற்படவில்லையே என்று குறை சொல்வோர்க்கு இது ஒரு பதிலடியாகவும் அமைகிறது. தமிழர் தலைமைத்துவம் கோணலாக அமைகிறது என்று சொன்னோர் தமிழர் தலைமைத்துவம் கோணலாக இருந்த நீதித்துறையை இன்று நிமிர வைத்திருப்பதைக் கண்டு மெளனித்துள்ளனர்.
தமிழர் சமூகத்தை எள்ளளவேனும் மதியாமல் இருந்து வந்த சிங்களத் தலைமைகள் இன்று சிறிது சிறிதாக எங்கள் உரிமைகளை உள்வாங்கத் தலைப்பட்டு விட்டனர் என்பதை இன்று நாடாளுமன்றில் அரங்கேற்றப்பட்ட புதிய அரசியல்திட்ட வரைவு பறைசாற்றி நிற்கிறது. இதில் சிலகுறைபாடுகள் இருக்கலாம். அந்தக் குறைபாடுகளை அடுத்த தலைமுறையினர் பார்த்துக்கொள்ளட்டும். மாற்றம் என்பது மாறாததொன்றா?
சிங்களத் தலைமைகள் எங்கள் உரிமைகளை இனிமேலும் தர மறுதலிப்பார்களேயானால் தமிழ் ஈழத்துக்காக நாம் போராட வேண்டாம். அதை அவர்களது நடவடிக்கைகளால் அவர்களே பெற்றுத் தருவார்கள். இதை மனதில் வைத்துத்தான் சம்பந்தன் ஐயா, மகிந்தவைப் பார்த்து தாமரை மொட்டில்தான் தமிழீழம் மலரும் என்றார். ஒன்றுபடுவோம்; ஒற்றுமையைப் பேணுவோம்; தலைமைக்கு வலுச்சேர்ப்போமாக.