side Add

புத்­தாண்­டி­லும் ஓயாத வாள்­வெட்­டுக் குழுக்­கள்

புத்­தாண்­டான நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பாண நக­ரில் இருந்து சில கிலோ மீற்­றர்­கள் தொலை­வில் உள்ள கொக்­கு­வில் பகு­தி­யில் வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அட்­ட­கா­சம் தொடர்­பான செய்தி பல­ரை­யும் பீதிக்­குள்­ளாக்­கி ­யுள்­ளது. பட்­டப் பக­லில் 50 பேர் வரை­யில் கும்­ப­லா­கச் சென்று தாக்­கு­தல் நடத்­தும் அள­வுக்கு இளை­ஞர் குழுக்­க­ளுக்கு துணிவு வந்­தி­ருக்­கின்­றது.

2009ஆம் ஆண்டு வரை­யில் போருக்­குள் சிக்­குண்­டி­ருந்த வடக்கு மாகா­ணம், அதன் பின்­ன­ரான திறந்த வெளி­யில் பல மாற்­றங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. கஞ்சா, ஹெரோ­யின், வாள்­வெட்டு, குழு­மோ­தல், பாலி­யல் மாத்­தி­ரை­கள் என்று வடக்கு மாகா­ணம் கேள்­விப்­பட்­டி­ராத சொற்­கள் அடிக்­கடி உச்­ச­ரிக்­கும் சொற்­க­ளாக மாறின. இப்­போ­தும் அது தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இளை­ஞர் சமு­தா­யம் உரி­மைக்­காக மீண்­டும் போரா­டக் கூடாது அல்­லது அதைப் பற்றி எண்­ணவே கூடாது என்­ப­தற்­காக, திட்­ட­மிட்டு மிக­நுண்­ண­ர­சி­ய­லாக சமூ­கப் பிறழ்­வு­கள் ஊட்­டப்­பட்­டன. இவற்­றி­லி­ருந்து இளை­ஞர்­களை மீட்­டெ­டுக்க வேண்­டிய தலை­மை­கள், வெறும் வாய்ப்­பேச்­சோடு அதி­லி­ருந்து ஒதுங்­கிக் கொண்­டுள்­ளார்­கள். அல்­லது அவர்­கள் அதற்கு மேலும் அக்­கறை செலுத்­த­வில்லை.

வாள்­வெட்­டுக்­கள், குழு மோதல்­கள் இடம்­பெ­றும்­போ­தெல்­லாம் தூக்­கத்­தி­லி­ருந்து விழித்­துக் கொண்­ட­வர்­கள்­போல சமய, சமூக, அர­சி­யல் தலை­வர்­கள் அறிக்கை விடு­வார்­கள். பொலி­ஸா­ரும், சந்­திக்கு சந்தி, மூலை முடுக்­கெல்­லாம் நிற்­பார்­கள். இரவு நேர சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­களை தீவி­ர­மாக முன்­னெ­டுப்­பார்­கள். இவை எல்­லாம் கொஞ்­சம் நாளைக்­குத்­தான். இதன் பின்­னர் அவ­ர­வர் தம்­பாட்­டில் சென்­று­வி­டு­வார்­கள்.

இந்­தச் செயற்­பா­டு­தான் கொக்­கு­வில் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இளை­ஞர்­கள் இவ்­வ­ளவு பேர் கும்­ப­லாக தாக்­கு­தல் நடத்­தச் செல்­வ­தற்­காக உற்­சா­கத்­தைக் கொடுத்­துள்­ளது. அது­வும், கொக்­கு­வில் காந்­திஜி சன­ச­மூக நிலை­யப் பகு­தி­யைச் சேர்ந்த இளை­ஞர்­க­ளுக்கு தாக்­கு­தல் நடத்த வரப்­போ­கின்­றோம் என்று தக­வல் கொடுத்­து­விட்­டுச் சென்­றி­ருக்­கின்­றார்­கள். யாழ்ப்­பா­ணத்­தின் முதன்மை வீதி­க­ளில் தங்­க­ளின் அதி நவீன பல லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான உந்­து­ரு­ளி­க­ளில் சாகா­சம் காட்­டி­ய­வாறு தாக்­கு­தல் நடத்­தச் சென்­றி­ருக்­கின்­றார்­கள். பொலி­ஸார் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்­தில் மூழ்­கி­யி­ருந்­தார்­களோ என்­னவோ, 23 உந்­து­ரு­ளி­க­ளில் கும்­ப­லா­கச் சென்ற இளை­ஞர்­களை எங்­கும் மடக்­கிப் பிடிக்­க­வில்லை.

கொக்­கு­வில் காந்­திஜி சன­ச­மூக நிலை­யப் பகுதி மக்­கள் திட்­ட­மிட்டு, தாக்­கு­தல் கும்­பலை விரட்­டி­ய­டித்து சில­ரைப் பிடித்­துப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ள­னர். அந்­தப் பகுதி மக்­கள் துணி­வு­டன் எடுத்த நட­வ­டிக்கை பாராட்­டத்­தக்­கது. தங்­க­ளைக் தட்­டிக்­கேட்க யாரு­மில்லை என்ற துணி­வில் செயற்­ப­டும் இளை­ஞர் குழுக்­க­ளுக்கு பாடம் படிப்­பிக்க அவர்­கள் செய்த விட­யம் மெச்­சத்­தக்­க­து­தான். ஆனா­லும், இதன் கார­ண­மாக அவர்­க­ளுக்கு எதிர்­கா­லத்­தில் பாதிப்பு வரா­மல் பார்த்­துக் கொள்­ள­வேண்­டி­யது பொலி­ஸா­ரின் கடமை.

இந்­தச் சம்­ப­வத்­து­டன் பொலி­ஸார் விழித்­துக் கொள்­வார்­கள். வீதிச் சோதனை, சுற்­றுக்­கா­வல் என்று தொட­ரும். ஆனால் இதனை பொலி­ஸார் தொடர்ந்து முன்­னெ­டுக்­கா­ வி­டின், இது­போன்ற இளை­ஞர் கும்­பல்­கள் மக்­களை அச்­சு­றுத்­தும் தங்­கள் கைங்­க­ரி­யத்தை தொடர்­வார்­கள்.

வெட்­ட­வெட்ட தளைக்­கும் வாழை­போல, ஒரு சில டசின்­க­ளில் சென்று தாக்­கு­தல் நடத்­திய இளை­ஞர்­கள் இப்­போது 50 பேர் ஒன்­றாக, ஒரே நேரத்­தில் வீதி­யில் பட்­டப் பக­லில் செல்­லும் துணி­க­ரத்­தைப் பெற்­றுள்­ளார்­கள். இதனை முளை­யிலேயே கிள்ளி எறி­ய­வேண்­டும். அதனை முத­லில் செய்­ய­வேண்­டும்.

You might also like