ரஜினியின் பேட்ட படப்பிடிப்புக்கு -பொலிஸ் பாதுகாப்பு!!

0 10

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்புக்காக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு “பேட்ட” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

‘பேட்ட’ படப்பிடிப்பு முதல் கட்டமாக டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது. அதன்பின் கடந்த சில நாள்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி பங்கேற்று நடித்தார்.

இதையடுத்து அடுத்த கட்டமாக “பேட்ட” படப்பிடிப்பை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரஜினி சென்னையில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்டு சென்றார். அவரது பாதுகாப்புக்காக 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.

லக்னோ விமான நிலையத்தில் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அவரது பெயரை உச்சரித்து கோ‌ஷம் போட்டனர். அங்கிருந்து ரஜினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

லக்னோவில் பேட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 500 பேர் வரை பணியாற்றி வருகிறார்கள். சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இதேபோல் வாரணாசி, சன்பாந்தராவிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும்.. ரஜினிகாந்த் பாதுகாப்புக்கு 25 பொலிஸாரை லக்னோ போலீஸ் உயர் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

பொலிஸார், ரசிகர்களை ரஜினி அருகே செல்லவிடாமலும், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். இதற்காக செல்போனுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

You might also like