side Add

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை- மீண்டும் திறக்க அனுமதி!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த ஸ்டெர்லைட் ஆலையை தடைச்செய்யக்கோரி போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் 100 வது நாள் அமைதிப்பேரணியில் கலவரம் வெடித்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டப்பேரவையை கூட்டி தீர்மானமாக நிறைவேற்றி சட்டமாக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது அரசு மறுத்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக இயங்க உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரியில் திறப்போம் என வேதாந்தகுழும தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை திறப்பது குறித்த வழக்கு நடந்து வந்தது.

வேதாந்தாவின் வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வாலா குழு மூலம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டதன் பேரில் ஆய்வு நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்கலாம் என தருண் அகர்வாலா குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் இன்று பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது தீர்ப்பில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை தினசரி கண்காணிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவாக தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

You might also like