பிள்ளைகளுடன் தலைமறைவாகிய இளவரசி!!

டுபாயின் ஆட்சியாளரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் மனைவியரில் ஒருவரான இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன், அச்சம் காரணமாக தனது இரண்டு பிள்ளைகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவையடுத்து, இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் லண்டனில் மறைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் குறைந்த பட்சம் 6 தடவைகள் திருமணம் செய்தவர். அவருக்கு 9 மகன்கள், 14 மகள்கள் என 23 பிள்ளைகள் உள்ளனர்.

ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமும் இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைனும் 2004 ஏப்ரல் 10 ஆம் திகதி திருமணம் செய்தனர்.

ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம், இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் தம்பதியருக்கு 11 வயதான மகள் ஜுலியாவும் 7 வயதான மகன் ஸயீத்தும் உள்ளனர்.

பிள்ளைகள் இருவருடனும் இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் கடந்த 11 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தன்னுடன் சுமார் 31 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அவர் ஜேர்மனியில் அரசியல் புகலிடம் கோரியதாகவும் முன்னர் செய்தி வெளியாகியது.  எனினும், தற்போது அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார் எனக் கூறப்படுகிறது.

You might also like