side Add

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு -‘சேவா மங்கலம்’ கோவை கையளிப்பு!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலய சேவா மங்கலம் திட்டத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் பெறும் கோவை கையளிப்பு நிகழ்வு போக்கட்டி அ.த.க.பாடசாலையில் நேற்று இடம்பெற்றது.

தென்மராட்சி கல்வி வலயத்தினால் வலயப் பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வுபெறும் ஆசிரியர்களின் சேவையை மதிக்கும் சேவா மங்கலம் என்னும் திட்டம் முன்னைய வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமாரினால் ஆரம்பிக்கப்பட்டது.

ஓய்வுபெறும் ஆசிரியர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அவரது ஓய்வூதியம் பெறுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வலயம் மேற்கொண்டு ஓய்வு பெறும் நாளில் அடுத்த மாதம் ஓய்வூதியம் பெறுவதற்கான சான்றிதழ்களை கையளிக்கும் திட்டமே சேவா மங்கலம் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் கொடிகாமம் போக்கட்டி அ.த.க.பாடசாலையில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றி நேற்றுடன் சேவையிலிருந்து ஓய்வுபெறும் ஆசிரியர் கணபதிப்பிள்ளை இரத்தினசபாபதியின் ஓய்வூதியத்திற்கான கோவையினை வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மராட்சி கல்வி வலய நிர்வாக அலகின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமையிலான வலயக் கல்விப் பணியக அலுவலர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

ஓய்வூதியம் பெறுவதற்கான சான்றிதழ்களை முகாமைத்துவ உதவியாளர் திருமதி ஆனந்தி ஜெயபவானும், ஆசிரியரின் சேவையை மதிப்பளிக்கும் கேடயத்தினையும் பாராட்டுப் பத்திரத்தினையும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரனும் வழங்கினர்.

You might also like