side Add

சட்டம் ஒழுங்கு சீராவதற்கு- மனம் வைப்பாரா மைத்திரி!!

யாழ்ப்பாணக் குடா­நாடு போதைப் பொருள்­களை விநி­யோ­கம் செய்­கின்ற மத்­திய நிலை­ய­மாக மாறி­வ­ரு­கின்­றது. பிற­வுண் ஐஸ் என அழைக்­கப்­ப­டும் கொடிய போதைப் பொருள் பொலி­ஸா­ரால் அண்மையில் கைப்­பற்­றப்­பட்டமை இதை உறுதிசெய்­கின்­றது.

போதைப் பொருள்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்­கள் தமது சுய நிலையை இழந்து விடு­கின்­ற­னர். இதன்­பின்­னர் தாம் செய்­வதை உண­ராத நிலை­யில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவர்­க­ளைக் கட்­டுக்­குள் வைத்­திருப்­பது இல­கு­வான காரி­ய­மல்ல.

ஏற்­க­னவே குடா­நாட்­டின் குறிப்­பிட்ட சில கடற்­க­ரைப் பகு­தி­க­ளில் கஞ்சா வியா­பா­ரம் கொடி­கட்­டிப் பறக்­கின்­றது. மீன­வர்­கள் போன்று கட­லுக்­குச் செல்­கின்ற சிலர் கஞ்­சா­வைக் கடத்­திச் சென்று விற்­பனை செய்­வ­தில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இத்­த­கை­ய­வர்­க­ளில் பலர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டு மறியலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும் கஞ்சா வியா­பா­ரம் ஓய்ந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

போதையால் அழிகிறது
இளையோர் எதிர்காலம்
இள­வ­ய­தி­னர் போதைப்­பொ­ருள்­க­ளைப் பாவிப்­ப­தன் மூல­மாக எதற்­குமே பய­னற்­ற­வர்­க­ளாக மாறி­வி­டு­கின்­ற­னர். இத­னால் எதிர்­கா­லத்­தைப் பற்­றிச் சிந்­திக்­கும்­போது அச்­ச­மா­க­வுள்­ளது. போதைப் பொருள்­க­ளைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் தம்மை அறி­யா­ம­லேயே குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். குடா­நாடு உட்­பட வடக்­கின் ஏனைய பிர­தே­சங்­க­ளில் சட்­டத்­துக்கு அஞ்­சாது இளவய­தி­னர் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்­குப் போதைப் பொருள் பாவ­னையே கார­ண­மெ­னக் கூறப்­ப­டு­கின்­றது.

சில தீய சக்­தி­கள் சாதா­ரண இளை­ஞர்­க­ளை­விட பாட­சாலை மாண­வர்­க­ளி­டே­யே­யும் போதைப் பொருள்­க­ளின் பயன்­பாட்டை ஊக்­கு­விக்கும் வகை­யில் செயற்­ப­டு­கின்­றன. மாண­வர்­க­ளின் ஒழுக்கத்தையும் பாழடிக்கின்றன. தமி­ழர்­கள் எத்­த­கைய இன்­னல்­கள் நேர்ந்­தா­லும் தமது கல்­விக்­குரிய முக்­கி­யத்­து­வத்தை ஒரு­போ­தும் குறைத்து விடு­வ­தில்லை. இதைச் சீர­ழித்து விடு­வ­து­தான் அந்தத் தீய­சக்­தி­க­ளின் நோக்­க­மா­க­வுள்­ளது. அவர்­க­ளின் நோக்­கம் நிறை­வே­று­மா­னால் தமி­ழர்­க­ளின் நிலை படு­மோ­ச­மாக மாறி­வி­டும்.

அரச தலை­வர் பொலிஸ்­து­றையை ஏற்­றுக்­கொண்ட பின்­னர் போதைப் பொருள்­க­ளின் விற்­பனை திடீ­ரெ­னக் குறைந்து விட்டது என்று கூறப்­ப­டு­கின்­றது. இதில் எந்த அள­வுக்கு உண்மை உள்­ளது என்­ப­தைக்­கூற முடி­ய­வில்லை. ஆனால் இதில் உண்­மை­யி­ருக்­கு­மா­னால் தெற்­கைப்­போன்று வடக்­கி­லும் போதைப்­பொ­ருள்­க­ளின் விற்­ப­னை­யும் பாவ­னை­யும் கட்­டுக்­கள் கொண்­டு­வ­ரப்­ப­டல் வேண்­டும். வடக்­கு தமி­ழர்­க­ளின் பகு­தி­தா­னே­யென்ற பாகு­பாடு இருக்­கவே கூடாது.

குடா­நட்­டில் திருட்­டுச் சம்­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தால் மக்­கள் அச்­சத்­து­டன் பொழு­தைக் கழிக்­கின்­ற­னர். எவ­ரா­லுமே தம்­மைக் காப்­பாற்ற முடி­யா­தென அவர்­கள் நினைக்­கின்­ற­னர்.

இந்­த­நிலை மாற்­றப்­ப­ட­வேண்­டு­மா­னால் மக்­க­ளின் பாது­காப்­புக்­குப் பொறுப்­பான பொலிஸ்­துறை தூய்­மை­யாக்­கப்­ப­டல் வேண்­டும். குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் பொலி­ஸுக்­கு­மி­டையே தொடர்­பு­கள் இருப்­ப­தன் கார­ண­மா­கவே குற்­ற­வா­ளி­கள் தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தப்­பித்து விடுகின்றனர் என்று பொது­மக்­கள் குற்­றம்­சாட்­டு­வ­தில் உண்மை இருக்­கு­மா­னால் அரச தலை­வர் இந்த விடயத்தில் கூடிய கவ­னம் செலுத்துதல் அவசியம். ஊழல் புரி­கின்ற பொலி­ஸா­ரைப் பணி­யி­லி­ருந்து நீக்கி விடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­ யி­லும் அவர் ஈடு­ப­ட­வேண்­டும்.

தென்பகுதியில் அதிகரித்துள்ள
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
தென்­ப­கு­தி­யில் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வங்­கள் சாதா­ர­ண­மாக இடம்­பெ­று­வ­தைக் காண முடி­கின்­றது. முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்­ச­வின் சொந்த மாவட்­டத்­தி­லுள்ள தங்­கா­லை­யில் நான்­கு­பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட அதே­வளை கொழும்­பி­லும் ஒரு­வர் துப்­பாக்­கிச் சூடு கார­ண­மாக இறந்­துள்­ளார்.

தெற்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் பாதாள உல­கக் குழுக்­க­ளி­டையே மோதல்­கள் ஏற்­ப­டு­வது சாதா­ரண விட­ய­மா­க­விட்­டது. இந்­தக் குழுக்­கள் போதைப்­பொ­ருள் வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு பணத்­தைச் சம்­பா­திப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ளன. இவர்­க­ளு­டன் செல்­வாக்­கு­மிக்க அர­சி­யல்­வா­தி­கள் தொடர்­பு­க­ளைப் பேணி வருகின்றனர் என்றும் கூறப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மா­கவே இந்­தக் குழுக்­கள் சட்­டத்­துக்கு அஞ்­சா­மல் செயற்­ப­டு­வ­து­டன் தண்­ட­னை­க­ளி­லி­ருந்­தும் தப்­பிக்க முடி­கின்­றது. இதே­நிலை நீடிக்­கு­மா­னால் நாட்டை எவ­ரா­லும் காப்­பாற்­றி­விட முடி­யாது.

சட்­டம் மற்­றும் ஒழுங்கு அமைச்­சைத் தம்­வ­சம் கொண்­டி­ருக்­கும் அரச தலை­வர் மனம்­வைத்­துச் செயற்­பட்­டால் வடக்­கில் மட்­டு­மல்­லாது அனைத்­துப் பிர­தே­சங்­க­ளி­லும் இடம்­பெ­று­கின்ற குற்­றச் செயல்­க­ளைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வர முடி­யும். மக்­க­ளும் இதைத்­தான் அவ­ரி­ட­மி­ருந்து எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

You might also like