புலிகளை நினைவுகூர்ந்தால் கைதிகளை விடுவியுங்கள்! – முரண்டு பிடிக்கிறார் கம்மன்பில!!

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை வீரர்கள் என்று நினைவுகூர இடமளிக்கப்பட்டால் அவர்களை விட கொடூரமற்றவர்களான, அனைத்து சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்

இவ்வாறு கூறியுள்ளார் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

எமது நாட்டு மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்தால் பரவாயில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். போர் பற்றி தனக்கு நல்ல புரிதல் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். தனது கட்சியை கைவிட்டு வந்து போருக்கு ஆதரவளித்துன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜித மறந்து விட்டாலும் ராஜிதவினரின் போர் எதிர்ப்பு முன்னணி மற்றும் வேறு அமைப்புகள், சர்வதேச சக்திகள் போர் வேண்டாம் என அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போதே நாங்கள் போர் செய்ய நேரிட்டது.

பயங்கரவாதத்தை போரில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று ராஜித என்னுடன் விவாதங்களில் கூட வாதிட்டார். அப்படியான ராஜித சேனாரத்ன, போரில் வெற்றி பெற்ற பின்னர் முப்பது ஆண்டு போர் முடிந்தது முப்பது ஆண்டுக்கு மன்னன் நீயே என்று எழுதி மகிந்த ராஜபக்ச மற்றும் தனது படத்துடன் பேனர்களை காட்சிக்கு வைத்தார்.

அமைச்சர் ராஜித புலிகளையும் ஜே.வி.பியினரையும் சமப்படுத்தி, ஜே.வி.பியினர் கார்த்திகை வீரர்கள் தினத்தை கடைப்பிடிக்க முடியும் என்றால் புலிகளுக்கு ஏன் முடியாது என்று கேட்கிறார். இந்த இரண்டினதும் வேறுபாட்டை புரிந்துக்கொள்ள முடியாத ராஜித அமைச்சர் பதவியை வகிப்பது எமக்கு வெட்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜே.வி.பி இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. விடுதலைப் புலிகள் இலங்கையில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே ஜே.வி.பி கிளர்ச்சி செய்தது. புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கம்யூனிச நாடுகள் உலகில் இருக்கின்றன. ஜனநாயகத்திற்கு விரோதமாக புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினாலும் பின்னர் ஜனநாயக நாடுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் ஆட்சியை கைப்பற்றும் விதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் நாட்டின் ஒரு பகுதியை பிரிக்கக் கோரி போரில் ஈடுபட்ட மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பு. புலிகளையும், ஜே.வி.பியினரையும் சமப்படுத்த முடியாது. 71 ஆம் ஆண்டு புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி. 89 ஆம் ஆண்டு இரண்டாவது புரட்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சிப் பெற இடமளிக்க தயாராக வேண்டாம் என புலிகளுக்கு பாலூட்ட முயற்சிக்கும் அரசின் தலைவர்களுக்கு நாம் நினைவூட்ட விரும்புகிறோம்.- என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close