நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடை!!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடர்வதால் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, டிசெம்பர் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு டிசெம்பர் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று (12) உயர்நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரால் இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று முற்பகல் இந்த மனுக்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை அறிவித்தார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்த நடவடிக்கையால் அரசியல் அமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி சார்பில் தாம் இன்று மன்றில் முன்னிலையாகி விளக்கமளித்தாலும், நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பிற்கு அமைவாகவே இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like