வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு!
வடக்கு மாகாண திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் போக்கு வரத்து சேவைக்காக மாகாண சபையின் பேருந்து சேவைகள் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 115ஆவது அமர்வு நேற்றையதினம் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த அமர்வில் அரச உத்தியோகத்தர்களுக்கான பேருந்து சேவை நஷ்டத்தில் இயங்குகின்றது என குறிப்பிட்டு அதனை ஆராய மாகாண சபையால் குழுவும் நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை வந்துள்ளது என அவைத்தலைவர் சபையில் குறிப்பிட்டார்.
ஆனால் அந்த அறிக்கை தொடர்பில் ஆராய முன்னரே முதல்வர் ‘அந்த சேவைகள் அனைத்தும் தனியார் பேருந்து உரிமையாளர் ஊடாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. அவர்களின் சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. அது தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்க வில்லை’ என்று முதல்வர் திடீரென இவ்வாறு பதிலை வழங்கினார்.
‘வடக்கு மாகாண சபை இருக்கின்ற ஒருவருட காலத்தில் இனி ஒரு குழுவை கூட நியமிக்க வேண்டாம். ஏனெனில் வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பல சந்தர்ப்பங்களில் ஏராளமான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் குழுக்களின் விசாரணை அறிக்கைகளையோ அல்லது பரிந்துரைகளையோ இங்கு யாரும் மதிப்பதாக இல்லை.
வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் ஊழல் தொடக்கம் பல விடயங்கில் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் தற்போதும் மாகாண அரச உத்தியோகத்தர்களின் போக்குவரத்து சேவை தொடர்பில் ஆராய அண்மையில் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் அங்கம் வகிக்கின்றேன். ஆனால் குழுவின் அறிக்கை வரமுதலே முதல்வர் தாமாக ஒரு முடிவை எடுத்துவிட்டால் பிறகு எதற்கு குழு அமைத்தீர்கள். வெறுமனே குழுக்களை அமைத்து உறுப்பினர்களின் நேரத்தை வீணாக்கி கொண்டிருப்பதற்கு இனிவரும் காலங்களில் குழுக்கள் அமைப்பதை அடியோடு நிறுத்துங்கள்’ என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் முதல்வரின் கருத்து தொடர்பில் காட்டமாக தனது கருத்துக்களைப் பதிந்தார்.
‘மாகாண திணைக்களங்களுக்கு பேருந்துகளை பகிர்ந்தளிக்கும்போது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கும் பேருந்து வேண்டும்’ என்று முதல்வர் கூறினார்.
அதற்கு அவைத்தலைவர் ‘பேரவை செயலகத்துக்கும் பேருந்து தேவையாகவுள்ளது. எனினும் நாம் கூறுவதா இல்லையா என்று இருந்தோம். எனினும் இதனையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்’ என தனது கருத்தை முன்வைத்தார்.