உலகைத் திரும்பி பார்க்க வைத்த ஊடகவியலாளர்!!

மகளுடன் உட்கார்ந்து செய்தி வாசிப்பு

பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சமா’ தொலைக்காட்சியில் பணியாற்றும் கிரண் நஸ் என்பவர், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைக் கண்டிக்கும் வகையில், தனது மகளைத் தூக்கி வைத்துக் கொண்டு செய்தி வாசித்துள்ளார்.

”இன்று நான் உங்கள் முன் செய்திவாசிப்பாளர் கிரண் நஸ் ஆக வரவில்லை. 2 வயதுச் சிறுமிக்குத் தாயாக, எனது மகளுடன் இங்கு வந்து உள்ளேன். பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் சிறிய சவப்பெட்டி மிக வலிமையானதாக மாறிவிட்டது. அந்த சவப்பெட்டிக்கு முன் ஒட்டு மொத்த பாகிஸ்தானும் புதைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை ஆகும்.” இவ்வாறு தனது செய்தித் தொகுப்பைக் கண்ணீருடன் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

அவருடைய இந்த செயல் அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சிறுமியுடன் அவர் அமர்ந்திருக்கும் ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

பின்னனி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கசூர் நகரம். அந்த நகரத்தைச் சேர்ந்த ஜைனப் என்ற 7 வயது சிறுமி, கடந்த 4- ஆம் திகதி அன்று, அதே பகுதியில் அமைந்துள்ள மதப் பள்ளிக்கூடத்துக்கு சென்றாள். ஆனால் அவள் வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர், அவளை தாய் மாமன்மாரிடம் ஒப்படைத்து விட்டு சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில் தான் அவள் காணாமல் போனாள்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்தச் சிறுமி பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, அவளது உடல் எலைட் கல்லூரி அருகேயுள்ள வயல்வெளியில் வீசப்பட்டிருந்தமை தெரிய வந்தது. அவளது உடலை பொலிஸார் கைப்பற்றி சடலப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அந்தச் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இது கசூர் மக்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், சிறுமி ஜைனப்பின் பெற்றோர் சவுதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பினார்கள். அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்தச் சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுச் சென்றனர். அவர்களின் போராட்டத்தில் கலவரம் மூண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like