ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனைவராலும் அன்னையர்தினம் கொண்டாடப்படுவது வழமை. அந்த வகையில் இன்று அன்னையர்தினம் கொண்டாடப்படுகிறது. காலையிலேயே அனைவரும் உங்களுடைய அம்மாவிற்கு வாழ்த்துக்களை கூறியிருப்பீர்கள். என்னதான் வாழ்துக்களைக் கூறினாலும் உண்மையில் உலகில் பலருக்கு தாய்மையின் தியாகங்களும் அவளின் களங்கமற்ற அன்பும் புரிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் புரிந்து கொண்டிருந்தால் இன்று உலகில் முதியோர் இல்லங்கள் இருப்பதற்கான அவசியம் இருந்திருக்காது.
தாய் என்பவள் உண்மையில் தான் கருவுற்ற காலம் முதல் தன் பிள்ளைக்காக தன் விருப்பங்களை தள்ளி வைத்து தன் முழுவாழ்க்கையையுமே பிள்ளைக்காக அர்ப்பணிப்பவள். எங்கே கலைந்து விடுவாயோ என்று எண்ணி தனக்கு பிடித்த உணவை உண்ணாமல் நீ வளர ஏதுவான உணவுகளை மட்டும் உண்பாள். படுக்கும் போது கூட உனக்கு வலிக்கும் என்று சரிந்து படுக்க மாட்டாள். வயிற்றுக்குள் நீ வளர வளர முள்ளந்தண்டு வளைந்து வலி குடுக்கும். குடல் நசுங்கி போக உண்ணும் உணவைக்கூட குறைத்து விடுவாள் உனக்காக.
உன் பிஞ்சு முகம் காணவென்று பிரசவத்தில் அத்தனை ஆயிரம் வலிகளைக்கடந்து மறுபிறப்பெடுத்து வருவாள். தன் மழலையின் முகம் பார்த்து தான் பட்ட வலிகளை எல்லாம் மறந்து போவாள். தன் உதிரம் தனை பாலாக்கி உனக்களிப்பாள். முதல் முதல் நீ அம்மா என்றழைக்கையில் அவள் அடையும் ஆனந்தத்தை ஓரிரு வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது. அடிவைத்து நீ நடக்க கை பிடித்து நடை பழக்குவாள். தனியே நீ நடக்கையில் தடக்கி நீ விழுந்திடுவாய் என்று உன் பின்னாலேயே வருவாள். உன் ஒவ்வொரு அசைவையும் உன் குறும்புகளையும் அணுஅணுவாய் ரசித்திருப்பாள்.
தன் கனவுகளை தனக்குள்ளே புதைத்துக்கொண்டு உன் ஆசைகளை நிறைவேற்றி இரவு பகலாய் உனக்கா சேவைகள் செய்து கொண்டு சம்பளம் ஏதுமற்ற ஒரு வேலைக்காரியாய் உனக்கு சேவைகள் செய்திடுவாள். சுயநலம் ஏதும் இன்றி உன்மேல் அன்பு காட்டிடுவாள். நீ வளர்சியடைந்தால் முதலில் மகிழ்வதும் தாய்தான் நீ வீழ்ச்சியடைந்தால் முதலில் வருந்துவதும் தாய்தான். களங்கமற்ற அவள் அன்பிற்கு உலகத்தில் எதுவும் ஈடில்லை. பத்து மாதம் கருவில் உனை சுமந்தும் தன் ஆயுள் முடியும் வரை நெஞ்சில் உனை சுமந்தும் உன் கனவகள் கைகூட தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் உனக்காக அர்ப்பணிப்பவள்தான் தாய்.
இப்படியாக தன் கனவுகள் இலட்சியங்கள் ஆசைகள் என அத்தனையையும் உனக்காக உதறித்தள்ளி பிள்ளைகளே உலகமென்று வாழும் அம்மாக்களை வெறுமனே அன்னையர் தினத்தில் மட்டும் கொண்டாடாமல் தினமும் அன்னையை போற்றிக் கொண்டாடுவோம். அனைத்துலக அன்னையர்களுக்கும் இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.