எப் 64 பிரிவுக்கான ஒட்டுமொத்த நிலையில் வெள்ளிப் பதக்கம்
(புதியவன்)
ஜப்பானின் கோபேயில் நடைபெற்று வரும் உலக பரா மெய்வல்லுநர் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை ஆண்களுக்கான எப் 44 பிரிவு ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமித்த துலான் கொடிதுவக்கு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
எப் 64 பிரிவுக்கான ஒட்டுமொத்த நிலையில் 2 ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
எப்42, எப்43, எப்44, எப்64 ஆகிய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த பரா மெய்வல்லுநர்கள் பங்குபற்றிய இப்போட்டி எப்64 என்ற ஒற்றைப் பிரிவின் கீழ் நடத்தப்பட்டது.
அப் போட்டியில் எப்44 பிரிவைச் சேர்ந்த சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 66.49 மீற்றர் தூரத்துக்கு எறிந்து அப் பிரிவுக்கான புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எம். பூரியன் 2021இல் 66.29 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து எப்44 பிரிவில் நிலைநாட்டியிருந்த முந்தைய உலக சாதனையையே சமித்த துலான் கொடிதுவக்கு முறியடித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஒட்டுமொத்த நிலைப்படுத்தலில் சமித்த துலான் கொடிதுவக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றதால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்துள்ளது.
அப் போட்டியில் எப்64 பிரிவைச் சேர்ந்த இந்திய வீரர் சுமித் 69.50 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சீனாவில் 2023இல் நடைபெற்ற ஹங்சௌ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் சுமித் இதே பிரிவில் ஈட்டியை 73.29 மீற்றர் தூரத்துக்கு எறிந்து உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.
அவரது சக நாட்டவரான சந்தீப் 60.41 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து இன்றைய போட்டியில் வெண்கலப் பதக்கதை வென்றமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.