புதியவன்
எதிர்வரும் தமிழ் - சிங்கள (சித்திரை) புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு(வெடி) விபத்துக்களைக் குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36 வீதமான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் 17 வீதமானோர் கண் பாதிப்புக்களுக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கான சிறப்பு வேலைத்திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
இதன்படி, பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் வீதி பாதுகாப்பு தேசிய சபை ஆகியன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரச தலைவர் ஊடக மையத்தில் நடைபெற்றது.
இதன்போது, கொழும்பு தேசிய மருத்துவமனையின் சிறப்பு சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் சஜித் ரணதுங்க, நேருக்கு நேராக முச்சக்கரவண்டிகள் மோதிக்கொள்வதால் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் உந்துருளிகளின் விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கடுமையான விபத்துக்களில் சிக்கியவர்கள் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் அதிவேக வீதிகளுக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களிலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதனால் நாளாந்தம் 10 பேர் வரையில் உயிரிழப்பதாகவும், விபத்துக்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்:
பண்டிகைக் காலத்தில் பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதேபோன்று, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பில் 1955 என்ற அவசர இலக்கத்துக்கு 24 மணித்தியாலங்களும் அறிவிக்க முடியும் என்பதோடு, கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்க அதிகாரிகள் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.