(பட்சி)
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே எண்டு படிச்ச காலமெல்லாம் மலையேறிப் போய் கன காலம், இப்பவெல்லாம் பேமஸான பள்ளியில் சேர்த்தல் தந்தைக்கு கடனே எண்டாகிப் போட்டுது. கம்பஸீக்கு கூட ஒரு மாதிரிப் படிச்சுப் பாஸ் பண்ணி உள்ளுக்க போயிடலாம். ஆனால் தரம் ஒண்டில பிள்ளையைச் சேர்க்கிறது எண்டால் நாய்படாப்பாடு படோணும். அதுவும் யாழ்ப்பாணம் ரவுண் பக்கம் இருக்கிறவை தங்கட பிள்ளையளை இந்து ஆரம்பப் பாடசாலையிலையோ,இல்லாட்டி பொஸ்கோவிலையோ தான் சேர்க்கத்தான் கடுமையா அலுவல் பாப்பினம். ஏதாவது ஓட்டுமாட்டுச் செய்தாவது பிள்ளையளை இந்தப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க ஓடித் திரிவினம்.
இந்த ரண்டு பள்ளிக்கூடத்துக்கும் கிடைக்காட்டித்தான் வேறு பள்ளிக்கூடங்களில் பிள்ளையளைச் சேர்க்கிறதைப்பற்றி யோசிப்பினம். ஏனெண்டால் கொலர்சிப் எக்ஸாமில இந்த ரண்டு பள்ளிக்கூடங்களிலையும் தான் குலை குலையாப் பிள்ளையள் 'பாஸ் 'பண்ணிறவை. ஒருக்கா பொஸ்கோவில கூடப் பிள்ளையள் பாஸ் பண்ணினால், அடுத்த முறை இந்து ஆரம்பப்பாடசாலைப்பிள்ளையள் 'பாஸ்'பண்ணிக்குவிப்பினம். இப்பிடிரண்டு பள்ளிக்கூடத்துக்கும் தான் கடும்போட்டி.
இப்பிடியான நிலையில பள்ளிக்கூடங்களுக்கு புதுசா பிள்ளையளைச் சேர்க்கிறதில திருகுதாளம் ஒண்டும் நடக்கக்கூடாது எண்டதுக்காக இந்த வருசத்தில இருந்து ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் மேற் பார்வைக்குழு எண்ட ஒண்டைப் போடச்சொல்லி அரசாங்கம் அறிவிச்சிருக்கு. அந்தச் சுற்றுநிருபத்தின் படி, வடக்கு மாகாணத்திலையும் மேற்பார்வைக் குழுக்களை பணிப்பாளர் நியமிச்சிருக்கிறாராம். ஆனால் யாழ்ப்பாண வலயத்தில மட்டும் தான் இந்தக் குழுக்களை அவர் போட்டிருக்கிறார். இப்ப அந்தக் குழுக்களைப் போட்டது பெரும் பிரச்சினையா மாறியிருக்கு. இந்து ஆரம்பப்பாடசாலையின்ர மேற்பார்வைக்குழுவின்ர தலைவரா, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு எந்த பொஸ்கோ பள்ளிக்கூடம் போட்டியா இருக்குதோ, அதின்ர பிரின்சிப்பலை தலைவராப் போட்டிருக்கினம். சரி, சுற்றுநிருபத்தின்படி, சம தகுதியுடைய அதிபரைத்தான் தலைவராப் போடலாம் எண்டதால பொஸ்கோ பிரின்சிப்பலான சிஸ்டரை இந்து ஆரம்பப்பாடசாலைக்கு போட்டால் பதிலுக்கு பொஸ்கோப் பள்ளிக்கூட மேற்பார்வைக்குழுவுக்கு இந்து ஆரம்பப்பாடசாலை அதிபரைத்தானே தலைவராப் போடோணும், அங்கதான் நிக்கிறார் பணிப்பாளர். இந்து ஆரம்பப்பாடசாலை அதிபரை இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலைக்கும், பெனடிக்ற் பள்ளிக்கூட அதிபரை (அவாவும் சிஸ்டர்தான்) பொஸ்கோவுக்கும் தலைவராப் போட்டிருக்கிறார் பணிப்பாளர்.
இப்ப என்னெண்டா இந்து ஆரம்பப்பாடசாலை அதிபரின்ர நாணயக்கயித்தை பொஸ்கோ அதிபரின்ர (சிஸ்டரிட்ட) குடுத்திருக்கு. அதனால தங்கட போட்டிப் பள்ளிக்கூடத்தை விழுத்த இல்லாட்டி இந்து ஆரம்பப் பாடசாலை அதிபரை வச்சுச்செய்யிறதுக்கு பொஸ்கோ அதிபருக்கு நல்ல சான்ஸ் கிடச்சிருக்கு பாலுக்கு பூனையைக் காவலுக்கு விட்ட கதை தான் "பணிப்பாளர் வேற மதம் எண்டதால இந்து பாடசாலையை விழுத்துறதுக்குதான் இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறார் எண்டு சனம் கதைக்குது. இன்னும் காலம் கெட்டுப்போகேலை. இனியாவது உந்தக் குழுக்களுக்கு சரியானபடி தலைவர்மாரை பணிப்பாளர் போடுவாரோ... (ஏ)
(10.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.