இப்ப கன கோயில்களில திருவிழாக்காலம். ஊர்வழியளில எங்க திரும்பினாலும் திருவிழாத்தான். இப்ப கோயில்களில் திருவிழா எண்டால் முதல்ல எல்லாருக்கும் சாமியை விடவும் லவுட்ஸ் ஸ்பீக்கர்தான் நினைவுக்கு வரும் போல. சாமிக்கு பூசைச்சாமான் இருக்கோ. இல்லையோ எண்டு அக்கறைப்படுறதை விடவும், எங்கட கோயில் பீக்கர் ஊர் முழுக்கக் கேக்கோணும்' எண்டு பவர் காட்ட நினைக்கிறதுதான்கூட. நாளொரு திருவிழாவும் பொழுதுதொரு லவுட் ஸ்பீக்கருமா இந்தத் தம்பட்டமடிப்பு கூடிக்கொண்டே போகும்.
அநேகமான ஊர்களில கிட்டக்கிட்டவா உள்ள ரண்டு மூண்டு கோயில் இருந்து, அந்த மூண்டு கோயில்லயும் ஒரேநேரத்தில திருவிழாவும் வந்தால், அவ்வளவுதான் கதை. திருவிழா முடிஞ்சபிறகு எல்லாரும் செவிட்டு மிசின் பூட்டிக்கொண்டு திரியவேண்டிய அளவுக்கு. காதுச் செவிப்பறை கிழிஞ்சிருக்கும். ஏதோ சாமியளுக்குள்ள சண்டை எண்ட கணக்கில ஒவ்வொரு கோயில்காரரும் மற்றக் கோயில் லவுட் ஸ்பீக்கர் சத்தத்தைவிட தங்கட லவுட் ஸ்பீக்கர் சத்தம்தான் மேவிக் கேக்க வேணும் எண்டு படாதபாடுபடுவினம். விடியப் பிறம் நாலுமணிக்கே அலறத் தொடங்கிற லவுட் ஸ்பீக்கர்களின்ர வாய். சாமம் தாண்டியும் ஓயாது. இந்த லவுட் ஸ்பீக்கருக்குள்ள ஏப்பிட்டு சின்னாபின்னமாகிறது பள்ளிக்கூடப் பிள்ளையள்தான். அதுவும் ஓ.எல். எக்ஸாமுக்கு இன்னும் ரண்டு கிழமைதான் இருக்கு. எக்ஸாம் நெருங்க நெருங்கத்தான் ஓ.எல். பிள்ளையளுக்கு கூடநேரம் படிக்க வேணும் எண்ட பயம் வரும். இந்தக் கடைசி நேரத்தில படிக்கிறது தான் பிள்ளையளுக்கு மனசில நிக்கும். நல்ல ரிசல்ட் எடுக்கிறதெல்லாம் இந்தக் கடைசி ரண்டு கிழமைப் படிப்பிலதான் தங்கியிருக்கு. ஆனால் கோயில்காரருக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லை. எக்ஸாமாவது மண்ணாங் கட்டியாவது' எண்டிட்டு அவையள் தங்கட பாட்டில, இன்னும் எங்கையெங்க லவுட் ஸ்பீக்கர் கட்டலாம் எண்டு இடம் பாக்கிற வேலையிலதான் பிஸியா இருப்பினம்.
எங்க லவுட் ஸ்பீக்கர் பாவிக்கிறதெண்டாலும் பொலிஸில அனுமதி எடுக்கவேணும். அப்பிடி அனுமதி எடுக்கப் போகேக்க, கோயில்ல இருந்து குறிப்பிட்ட கொஞ்சத் தூரத்துக்குத்தான் லவுட் ஸ்பீக்கர் சத்தம் கேக்க வேணும் எண்டு அனுமதி குடுக்கிறவை. ஆனால் அப்பிடி அனுமதி வாங்கிப் போட்டு, வங்களா விரிகுடா மட்டும் குழாயைக் கட்டி, கெத்துக்காட்டுறதுதான் வாடிக்கை. இதுகளை எங்கட பொலிஸ்காரரும் கண்டு கொள்ளாயினம். ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் எண்டால் மட்டும் பாய்ஞ்சு பாய்ஞ்சு கோர்ட்ஸில கேஸெல்லாம்போட்டு, அரெஸ்ட் பண்ணத் தெரிஞ்சவைக்கு, இப்பிடி சின்னப்பிள்ளையளின்ர படிப்பைக் குழப்பிறமாதிரி, அனுமதியைமீறி, கோயில்களில் அலறுற லவுட் ஸ்பீக்கர்கள் கண்ணுக்குத் தெரியாதது அதிசயம் தான்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.